Rajinikanth: ரஜினி சார் என்னை நம்பணும்!.. அது நடந்தா பண்ணுவேன்!.. மாரி செல்வராஜ் பேட்டி!...

Mari Selvaraj: தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனராக இருந்தாலும் சரி.. அவர் ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து விட்டால் அந்த படம் தனக்கு பிடித்து விட்டால் உடனே அவரை செல்போனிலோ அல்லது நேரிலோ அழைத்து பாராட்டுவது நடிகர் ரஜினியின் வழக்கம். பல வருடங்களாகவே இது அவர் பின்பற்றி வருகிறார்.
அப்படி செய்வதன் மூலம் அந்த இயக்குனருக்கு கௌரவம் கிடைக்கிறது. தன்னுடைய முதல் படம் ஹிட் அடித்த உடனேயே ‘தன்னை ரஜினி சார் அழைத்து பாராட்ட மாட்டாரா’ என பல இளம் இயக்குனர்கள் ஏங்குவதுண்டு. அப்படி அந்த இயக்குனரை கூப்பிட்டு பாராட்டி பேசும்போது அந்த படம் பற்றிய சில நுணுக்கமான விஷயங்களை பேசி இயக்குனரையே ரஜினி ஆச்சரியப்படுத்துவதுண்டு..
அதேபோல், ‘நமக்கு ஏதாவது கதை இருக்கா?’ என்று கேட்பது ரஜினியின் வழக்கம். அப்படி கேட்கும் எல்லோரின் இயக்கத்திலும் அவர் நடிக்க மாட்டார் என்றாலும், ஆர்வமாக அப்படி கேட்பார். அப்படி கேட்கும் போது அந்த இயக்குனரிடம் கதை இருந்தால் அவர் சொல்லுவார்.. இல்லையென்றால் சில நாட்கள் கழித்து வந்து ரஜினிக்கு ஒரு கதை சொல்லுவார். அந்த கதை பிடித்திருந்து, அந்த இயக்குனர் மீதும் நம்பிக்கை இருந்தால் அந்த கதையில் ரஜினி நடிப்பார். அப்படித்தான் அவர் நெல்சன், லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்பாராஜ் ஆகிய இயக்குனர்களின் படங்களில் நடித்தார். அந்த லிஸ்டில் இப்போது மாரி செல்வராஜும் இருக்கிறார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருந்த பைசன் நாளை வெளியாகவுள்ள நிலையில் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் ரஜினியுடன் இணைந்து படம் பண்ணுவது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதில் சொன்ன மாரி செல்வராஜ் ‘ என் மீது ரஜினி சாருக்கு அன்பு உண்டு. என்னுடைய ஒவ்வொரு படம் வெளியாகும் போதும் பார்த்துவிட்டு என்னை கூப்பிட்டு பாராட்டி பேசுவார். வாழை படத்திற்கு ஒரு பெரிய கடிதமே அனுப்பியிருந்தார். நான் சில கதைகளை அவரிடம் சொல்லி இருக்கிறேன்.
ஆனால் என் ஸ்டைல் அவருக்கு செட் ஆகுமா என அவர் யோசிக்கலாம். அவர் என்னை நம்ப வேண்டும். சின்ன நடிகராக இருந்தாலும் பெரிய நடிகராக இருந்தாலும் என் கதை, என் உலகம், என் மக்கள், அந்த கதையின் உண்மை, நேர்மை ஆகியவற்றை புரிந்து நடிக்க முன்வந்தால் கண்டிப்பாக யாராக இருந்தாலும் நான் படமெடுப்பேன். அது ரஜினி சாராக இருந்தாலும் சரி.. துருவாக இருந்தாலும் சரி..’ என பதில் சொல்லியிருக்கிறார் மாரி செல்வராஜ்