40 வயசு வரைக்கும் பைத்தியக்காரனாக இருந்தேன்.. மனதை உருக்கும் தேவாவின் மறுபக்கம்
தமிழ் சினிமாவில் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் என்ற இரு பெரும் ஆளுமைக்கு மத்தியில் தனது தனி திறமையால் சிகரம் தொட்டவர் தேனிசை தென்றல் தேவா. 90களின் காலகட்டத்தில் இவரின் என்ட்ரி தமிழ் திரையுலகத்தில் ஒரு பசுமையான காலம் என்று சொல்லலாம். சம காலங்களில் இசையமைப்பாளர்கள் சங்கர் கணேஷ், சந்திர போஸ், எஸ்.ஏ.ராஜ்குமார் போன்றவர்களின் வரவுகளால் தமிழ் சினிமா புத்துயிர் பெற்றாலும் தேவா இவர்களிடமிருந்து தனியாக தெரிந்தார்.
அந்த காலகட்டத்தில் சிறு பட்ஜெட் படங்களின் விருப்பத்திற்குரிய இசையமைப்பாளராக தேவா இருந்தார். தொடர்ந்து ஹிட் பாடல்கள் கொடுத்து முன்னணி இசையமைப்பாளர்களின் பட்டியலில் இணைந்தார். இன்றைக்கு எப்படி எந்த மியூசிக் டைரக்டர் என்ன பாட்டு போட்டாலும் அது காபி கட் என்று ட்ரோல் செய்ய ஆரம்பித்து விடுவார்களோ, அதே போல தேவாவையும் இவர் ஹிந்தி படங்களின் பாடல்களை காப்பி அடிப்பவர் என்று இவர் மீது விமர்சனங்கள் வந்தது.
வெகுஜன மக்களிடம் தேவா சென்றது ”கானா” பாடல் மூலம்தான். அன்று வரை இளையராஜா கிராமத்து இசையில் மக்களை மயக்கி கொண்டிருக்கும் சமயத்தில் மறுபுறத்தில் ஏ.ஆர்.ரகுமான் மேற்கத்திய இசையின் மூலம் புதுமை செய்து கொண்டிருந்தார். ஆனால் பாடல்கள் கேட்டவுடன் மக்கள் மனதில் பதிந்தது என்னவோ கானா பாடல்கள். எனவே அன்றைய கால தயாரிப்பாளர்கள் அதுவும் சிறு படங்களை எடுக்கும் தயாரிப்பாளர்களின் விருப்பத்திற்குரிய இசையமைப்பாளராக தேவா உருவானார்.
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் தேவாவிற்கு தேனிசைத் தென்றல் என்ற பட்டத்தை கொடுத்தார். அந்தப் பட்டத்தை கொடுத்த கையோடு வெளியான திரைப்படம் தான் ”வைகாசி பொறந்தாச்சு” அன்று இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ”சின்ன பொண்ணுதான் வெட்கப்படுது அம்மா அம்மாடி” பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தது. குறிப்பாக அன்றைய காலத்தில் வானொலியில் திரும்பத் திரும்ப போடப்பட்ட பாடல் இதுதான் என்ற தகவலும் இருக்கிறது.
அருணாச்சலம் படத்தில் ரஜினியின் அறிமுக டைட்டில் கார்டில் வரும் தீம் மியூசிக் இன்று வரை ரஜினியின் படங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு, மலையாளம்,கன்னடம் என மொத்தம் 400 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ளார் தேவா. இந்நிலையில் சமீபத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தேவா தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அதில் பேசியதாவது
“நான் சிறு வயதில் மியூசிக் டைரக்டராக வேண்டும். என்ற கனவு இருந்தது அதற்காக நான் யாரும் இல்லாத தனி அறையில் கதவைப் போட்டுக் கொண்டு என் கண்முன்னே தபேலா, ஆர்மோனியப்பட்டி எல்லாம் இருப்பது போன்று நினைத்துக் கொண்டு 1,2,3,4 என்று சொல்லிக் கொண்டிருப்பேன். இதை யாராவது ஜன்னல் வழியா எட்டிப் பார்த்தார்கள் என்றால் என்னடா இவன் பைத்தியக்கார மாதிரி பண்ணிக் கொண்டிருக்கிறான் என்று சொல்வார்கள்”.
”நான் 40 வயசுக்கு மேல தான் சினிமாவுக்கு வந்தேன். அதாவது என் வாழ்க்கையில் இன்டர்வலுக்கு அப்புறம் சினிமாவில் நுழைந்தேன். ஒரு படத்தினுடைய சக்சஸ் எப்போது என்றால் இடைவேளைக்கு முன்பு வரை கதை தோய்வாக இருந்தாலும் அதன் பிறகு வரும் கிளைமாக்ஸ் காட்சி நன்றாக இருந்தால் படத்தை தூக்கி நிறுத்தும். அதே போல தான் வாழ்க்கையும் எனக்கு 40 வயது வரைக்கும் தோய்வுதான், ஆனாலும் பரவாயில்லை அதற்குப் பிறகு ஒரு நல்ல வாழ்க்கையை ஆண்டவன் கொடுத்திருக்கிறார்”.
”அதனால் யாரும் 25 வயதில் அல்லது 30 வயதில் பெரிய ஆளாக வர முடியவில்லை என்று யாரும் நினைக்க வேண்டாம். நமக்கான நேரம் வரும் நம்முடைய கனவுக்கு என்று ஒரு இடம் உண்டு. ஒரு நாலு செவுத்துக்குள்ள மியூசிக் கம்போஸ் பண்ணி அவங்க சொல்றது எல்லாம் நாம கேட்டு பண்பா பணிவோடு இருந்தால் நேரு ஸ்டேடியத்தில் தலை நிமிர்ந்து நிக்கலாம்”. என்று இன்றைய காலத்து இளைஞர்களுக்கு தேவையான மோட்டிவேஷன் ஸ்பீச்சை கொடுத்துள்ளார். இவரின் பேச்சைக் கேட்ட சில ரசிகர்கள் தற்போது தான் எங்களின் மன அழுத்தம் குறைந்துள்ளதாக கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றன.
