இனிமேல் அப்படி கூப்பிட வேண்டாம்!.. கமல், அஜித், ஜெயம் ரவி வரிசையில் நயன்தாரா!..

Nayanthara: ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் நயன்தாரா. அதன்பின் படிப்படியாக முன்னேறி தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இவர் சினிமாவில் நடிக்க துவங்கி பல வருடங்கள் ஆன பின்னரே நம்பர் ஒன் இடத்தை பிடித்தார். அட்லி இயக்கத்தில் நடித்த ராஜா ராணி திரைப்படம் அதற்கான விதையை போட்டது.
அதன்பின் விஜய், அஜித், விக்ரம், சூர்யா, ரஜினி உள்ளிட்ட பலருடனும் ஜோடி போட்டு நடித்தார். நானும் ரவுடிதான் படம் உருவானபோது அந்த பட இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்தார். சில வருடங்கள் இருவரும் காதலர்களாக ஊரை சுற்றிவிட்டு 2 வருடங்களுக்கு முன்பு திருமணமும் செய்து கொண்டனர்.

பெரிய நடிகர்களுக்கு மட்டும் ஜோடியாக நடிக்கும் நயன்தாரா மற்றபடி பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வருகிறார். அறம், மாயா, நெற்றிக்கண், அன்னப்பூரணி உள்ளிட்ட பல படங்களிலும் அப்படி நடித்தார். இவருக்கு லேடி சூப்பர்ஸ்டார் என்கிற பட்டமும் கொடுக்கப்பட்டது.

படத்தின் டைட்டில் கார்டில் லேடி சூப்பர்ஸ்டார் என கண்டிப்பாக போட வேண்டும் என நயன் தரப்பில் அழுத்தம் கொடுத்ததாகவும் சொல்லப்பட்டது. இதில், விக்னேஷ் சிவனும் மிகவும் கறாராக இருந்ததாக செய்திகள் வெளிவந்தது. கடந்த சில வருடங்களாக நயன்தாரா நடித்து வெளியான படங்கள் எதுவும் ஓடவில்லை.
இந்நிலையில்தான், இனிமேல் என்னை லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்க வேண்டாம் என நயன்தாரா கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘பட்டங்களும் விருதுகளும் மதிப்புமிக்கவைதான், ஆனால் சில சமயங்களில் அவை நம்மை வேலையில் இருந்தும், கலைத்தொழிலில் இருந்தும், உங்கள் அன்பான தொடர்பில் இருந்தும் பிரிக்கக் கூடும்’ என பதிவிட்டுள்ளார். நயன்தாரா என்பதே என் பெயர். என் பெயர்தான் எனக்கு நெருக்கமான ஒன்று. அது மட்டுமே என்னை குறிக்கிறது’ என பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே உலக நாயகன் என அழைக்க வேண்டாம் என கமலும், ஜெயம் ரவி என அழைக்க வேண்டும் என ரவியும், தல என அழைக்க வேண்டாம் என அஜித்தும் இதேபோல் அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.