Jailer 2: கூலி பயத்த காட்டிடுச்சு போல! ‘ஜெயிலர் 2’க்காக அமைதி காக்கும் நெல்சன்.. நல்ல முடிவு
Jailer 2: தற்போது ரஜினி நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். கூலி படத்திற்கு பிறகு ரஜினி நடிக்கும் திரைப்படம் ஜெயிலர் 2. இந்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தான் ஜெயிலர் 2 திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது. இந்த படத்திற்காக நெல்சன் பெரும்பாலும் லைவ் லொகேஷனில் தான் படமாக்கி வருகிறார்.
இது மிகப்பெரிய சவாலாகவும் இருக்கும். ஏனெனில் ரஜினியை வைத்து லைவ் லொகேஷனில் படமாக்குவது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது. இந்த நிலையில் இறுதிக்கட்டத்தை ஜெயிலர் 2 திரைப்படம் எட்டி இருப்பதாக சொல்லப்படுகிறது. டிசம்பர் மாதத்திற்குள் ஜெயிலர் 2 திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பு முடிந்துவிடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு அடுத்தபடியாக லோகேஷ் இயக்கத்தில் கமல் ரஜினி இணைந்து நடிக்க போகும் படப்பிடிப்பு துவங்கும் என்றும் ஒரு தகவல் சொல்லப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே ரஜினி கமல் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் பரவி வந்தன. இதை உறுதிப்படுத்தும் விதமாக சைமா விருது வழங்கும் விழாவில் கமலே இதைப் பற்றி தெளிவாக கூறியிருக்கிறார்.
கிட்டத்தட்ட 40 வருடங்கள் கழித்து ரஜினி கமல் இணைந்து நடிப்பதாக வந்த செய்தி தான் இப்போது பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த படத்தை கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கும் என்றும் ஒரு பக்கம் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் ஜெயிலர் 2 திரைப்படத்தைப் பற்றி நெல்சன் சமீபத்தில் ஒரு தகவலை கூறி இருக்கிறார். அதாவது படம் உண்மையில் எப்படிப்பட்ட படமாக வரப்போகிறது என்பதை பற்றி இப்போது பேச விரும்பவில்லை .
படம் வெளியாகும் வரை காத்திருப்போம். படத்தைப் பற்றிய அதிக எதிர்பார்ப்புகளையும் உருவாக்குவதை நான் தவிர்த்து வருகிறேன். ஏனெனில் எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டால் மக்கள் ஒன்று நினைத்து உள்ளே வருவார்கள் .அது அங்கு இல்லாத பட்சத்தில் அவர்களுக்கு பெரிய ஏமாற்றமாக இருக்கக்கூடும். அதனால் எதிர்பார்ப்புகள் எதார்த்தமாக இருப்பதே நல்லது என்று கூறியிருக்கிறார்.
ஏற்கனவே லியோ படத்திற்கும் கூலி படத்திற்கும் லோகேஷ் பெரிய அளவில் பில்டப் செய்து வைத்திருந்தார். ஆனால் இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாக கடுமையாக விமர்சிக்கப்பட்டன. ஏன் சமீபத்தில் வெளியான கூலி படமுமே திரைக்கதையில் சொதப்பி விட்டார் லோகேஷ் என்றுதான் கூறி வந்தார்கள். அதனால் படம் ரிலீஸுக்கு முன்பு வரை எந்தவொரு ஹைப்பையும் கொடுக்காமல் அமைதியாகவே இருந்து விடுவோம் என்று நெல்சன் முடிவு எடுத்துவிட்டார்.
