Dude: படத்துல தெளிவா சொல்லணும்!.. பேட்டியில இல்ல!.. டியூட் இயக்குனரை பொளக்கும் நெட்டிசன்கள்!...

சுதா கொங்கராவின் உதவியாளர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ, சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து தீபாவளி விருந்தாக கடந்த வெள்ளிக்கிழமை வெளியான திரைப்படம் டியூட்.இந்த கால இளசுகளுக்கு ஏற்றபடி அவர்களை கவரும்படி ஒரு கதையை எழுதி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் கீர்த்தீஸ்வரன்.
ஜென் சி என சொல்லப்படும் 20ல் இருந்து 25 வயதுக்கு உட்பட்ட இந்த கால இளசுகள் பெண்களுடன் எப்படி பழகுவார்கள்?.. எப்படி பேசுவார்கள்? பெண்ணுடனான நட்பு, அவர்கள் காதலை எப்படி அணுகுவார்கள்? வாழ்க்கையை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்பதையெல்லாம் இந்த படத்தில் காட்சிகளாக காட்டி இருக்கிறார் கீர்த்தீஸ்வரன்.
இந்த படம் வெளியான 5 நாட்களில் 93 கோடி வசூல் செய்து விட்டது. நேற்றோடு இப்படம் 100 கோடி வசூலை தாண்டி இருக்கும். அதேநேரம், டியூட் படம் எல்லா தரப்பினரையும் கவரவில்லை. அட்வான்ஸாக சொல்கிறேன் என காதல், பெண்ணுடனான நட்பு, திருமண உறவு, தாலி செண்டிமெண்ட் என எல்லாவற்றையும் மோசமாக சித்தரித்திருப்பதாக பலரும் சொல்கிறார்கள்.
எனவே, 40 வயதுக்கு மேற்பட்டவர்களை Dude படம் கவரவில்லை. இது சமுதாயத்திற்கு தேவையில்லாத படம் என்றெல்லாம் அவர்கள் பேசி வருகிறார்கள். அதிலும் தான் காதலித்த பெண்ணுக்கு திருமணமான பின்னரும் அவர் மீது ஹீரோ காதல் கொள்வது போலவும், அந்த பெண்ணுக்கும் இவரை பிடிப்பது போலவும், ஏற்கனவே காதலித்து விட்டு சென்ற பெண் தன்னை தேடி வரும்போது அவளிடமும் அவன் காதல் கொள்வது போலவும் என ஹீரோவின் கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் இதுபற்றி ஊடகம் ஒன்றில் விளக்கம் அளித்த கீர்த்தீஸ்வரன் ‘ஒரே நேரத்தில் ஒரு ஆண் இரண்டு பெண்களை காதலிப்பதுதான் தவறு. அதேநேரம் அவன் ஒரு பெண்ணை விரும்பி அவளிடம் காதலிடம் சொல்லி அவள் மறுத்து அதன்பின் அவன் அதிலிருந்து விலகி வேறு ஒரு வாழ்க்கைக்கு சென்று விட்டான். மீண்டும் அந்த பழைய காதல் அவனை தேடி வரும் போது அந்த காதலுடன் செல்வதை விட தற்போது தன்னை சந்தோஷமாக வைத்திருப்பது யார்? தற்போது தான் காதலிப்பது யார்? யார் மீது இன்னமும் அன்பு இருக்கிறது? தன் மீது உண்மையாக அன்பு செலுத்துவது யார்? ஆகியவற்றை மனதில் நினைத்து அவன் முடிவெடுக்கிறான் என்பதையே நான் காட்டி இருந்தேன்’ என சொல்லியிருக்கிறார்.
இந்த வீடியோவை பகிர்ந்து ‘இதையெல்லாம் படத்தின் திரைக்கதையில் தெளிவாக சொல்ல வேண்டும். அதுதான் ஒரு இயக்குனரின் வேலை. இதை பேட்டியில் உட்கார்ந்து சொல்லி ரசிகர்களுக்கு புரிய வைக்க கூடாது. டியூட் ஒரு கமர்சியல் திரைப்படம். எனவே அதன் திரைக்கதை படம் பார்க்கும் எல்லோருக்கும் தெளிவாக புரிய வேண்டும்’ என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.