சமந்தாவுக்காக வரிஞ்சு கட்டிக்கிட்டு வரும் அக்கடதேச பிரபலங்கள்... மேடம்க்கு மவுஸ்சு குறையல..!

by ramya |
சமந்தாவுக்காக வரிஞ்சு கட்டிக்கிட்டு வரும் அக்கடதேச பிரபலங்கள்... மேடம்க்கு மவுஸ்சு குறையல..!
X

samantha

தமிழ், தெலுங்கு உள்ளிட மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா, தற்போது பாலிவுட் சினிமாவிலும் நடித்து வருகின்றார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகரான நாகசைதன்யாவை காதலித்து இரு வீட்டார் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு மிகச் சிறந்த ஜோடியாக வலம் வந்த இவர்கள் பின்னர் 2021 ஆம் ஆண்டு பரஸ்பரமாக பேசி விவாகரத்து செய்து கொண்டனர்.

விவாகரத்தின் போது நாகசைதன்யா தரப்பிலிருந்து ஜீவனாம்சம் கொடுக்க முன் வந்த போதும் சமந்தா அதனை நிராகரித்து விட்டதாக கூறப்படுகின்றது. இருவரும் விவாகரத்து பெற்ற பிறகு கடந்த மூன்று வருடங்களாக அவரவர் வேலைகளை பார்த்து வருகிறார்கள். இருவரும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் நாகசைதன்யாவுக்கும் நடிகை சோபிதா துளிபாலாவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள்.

இந்நிலையில் நடிகர் நாகசைதன்யாவும் சமந்தாவும் விவாகரத்து பெற்றதற்கு காரணம் கே டி ஆர் தான் என்று பெண் அமைச்சர் கொண்டா சுரேகா கூறியிருந்தது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக நடிகை சமந்தாவே தனது சமூக வலைதள பக்கத்தில் நாங்கள் இருவரும் பரஸ்பரமாக பேசி விவாகரத்து செய்து கொண்டோம். உங்கள் அரசியல் நோக்கத்திற்காக எனது பெயரை பயன்படுத்த வேண்டாம் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் சமந்தாவுக்காக தெலுங்கு சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் ஜூனியர் என்டிஆர் தனது சமூக வலைதள பக்கத்தில் 'கொண்டா சுரேகா அவர்களே, தனிப்பட்ட வாழ்க்கையை அரசியலுக்கு இழுப்பது தரம் தாழ்ந்தது. உங்களைப் போன்ற பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் தனி நபர்களின் முடிவுகளுக்கும் அவர்களின் உரிமைகளுக்கும் மரியாதை அளிக்க வேண்டும். பொதுவாகவே திரையுலகை பற்றி ஆதாரமற்ற அறிக்கைகள் அலட்சியமாக வீசப்படுவது வருத்தம் கொடுக்கின்றது.

மற்றவர்கள் எங்கள் மீது ஆதாரமற்ற குற்றங்களை கூறும் போது நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். ஜனநாயக இந்தியாவில் இதுபோன்ற பொறுப்பற்ற நடத்தையை நமது சமூகம் இயல்பாக்காது என்பதை உறுதி செய்கின்றோம்' என்று காட்டமாக பதிவிட்டிருந்தார். இதை தொடர்ந்து நடிகர் நானி தனது சமூக வலைதள பக்கத்தில் 'எப்பேர்பட்ட முட்டாள்தனத்தையும் பேசிவிட்டு அதிலிருந்து தப்பித்து விடலாம் என்று நினைக்கும் அரசியல்வாதிகளை பார்ப்பதற்கு அருவருப்பாக உள்ளது.

உங்கள் வார்த்தைகள் மிகவும் பொறுப்பற்றதாக இருக்கின்றது. மக்கள் மீது உங்களுக்கு ஏதேனும் பொறுப்பு இருக்கும் என்று எதிர்பார்ப்பது எங்களது முட்டாள்தனம். இது நடிகர்கள் அல்லது சினிமா சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. எந்த அரசியல் கட்சியையும் கூட அவ்வாறு விமர்சிக்க கூடாது. ஊடகங்களுக்கு முன்னால் இப்படி அடிப்படை ஆதாரமற்ற குப்பைகளை பேசுவது சரி என்று நினைப்பது சரியானது கிடையாது. நமது சமூகத்தை மோசமாக பிரதிபலிக்கும் இத்தகைய செயலை கண்டிக்க வேண்டும்' என்று பதிவிட்டு இருந்தார்.

அது மட்டும் இல்லாமல் நடிகர் நாகச்சைய்தன்யா விவாகரத்து தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பேசியிருக்கின்றார். 'விவாகரத்து என்பது வாழ்வில் எடுக்கப்படும் கடினமான முடிவு. இது இரண்டு தனிப்பட்ட நபர்களின் முடிவு. நாங்கள் பரஸ்பரமாக பேசி விவாகரத்து பெற்றுக் கொண்டோம். இருப்பினும் இந்த விஷயத்தில் பலரும் பல விதமான கருத்துக்களை தெரிவிப்பது கவலை அளிக்கிறது. இத்தனை நாட்களாக எனது முன்னாள் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினருக்காக அமைதியாக இருந்தேன்.

அமைச்சர் கொண்டா சுரேகாவின் பேச்சு ஆதாரமற்றது மட்டுமில்லாமல் கேலிக்குரியது. முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியல்வாதிகள் தலைப்புச் செய்திகளில் இடம்பெற வேண்டும் என்பதற்காக சினிமா பிரபலங்களை பயன்படுத்துவது வெட்கக்கேடானது' என்று கூறியிருக்கின்றார். இப்படி தெலுங்கு சினிமாவில் இருக்கும் முன்னணி பிரபலங்கள் பலரும் சமந்தாவுக்காக பேசி வருகிறார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் இருந்து ஒருவர் கூட வாயை திறக்கவில்லை.

Next Story