ஐயோ நான் பரவாயில்ல.. ரஜினி, விஜயகாந்த் தமிழை விமர்சித்த பார்த்திபன்

சமீபத்தில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான ரெங்கராஜ் பாண்டேவுடனான நேர்காணலில் நடிகர் பார்த்திபன் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்திருக்கிறார். ரெங்கராஜ் பாண்டேவும் சரி பார்த்திபனும் சரி வார்த்தையில் வித்தை காட்டும் நபர்கள்தான். நேர்காணல் கொடுக்கும் எந்த பிரபலமாக இருந்தாலும் அவர்களை தன் கேள்விகள் மூலம் கொக்கி போட்டு இழுத்து மடக்கி விடுவார் ரெங்கராஜ் பாண்டே.
அந்த வகையில் பார்த்திபனை தன் வலையில் சிக்க வைக்க வேண்டும் என நினைத்தார். ஆனால் நீச்சலடித்து எப்படியே வெளியே வந்துவிட்டார் பார்த்திபன். இந்த நேர்காணலில் பார்த்திபன் ஏன் அவருடைய மனைவியை விட்டு பிரிந்தார் என்பதற்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளார். அதாவது பிரிய வேண்டும் என நினைத்து கிட்டத்தட்ட 12 வருடங்கள் காத்திருந்ததாக கூறினார் பார்த்திபன்.
இப்பொழுது இருக்கிற தெளிவு அப்பவே இருந்திருந்தால் உடனே பிரிந்திருப்போம். அதுவும் காதலுடனேயே பிரிந்திருப்போம். அதுதான் நாங்கள் செய்த தவறு என கூறியுள்ளார். அதாவது சின்ன சின்ன விஷயங்கள் தான் பெரிய பிரச்சினையாக மாறியது என்றும் தெரிவித்துள்ளார். கல்யாணத்திற்கு பிறகு நடிக்கவே மாட்டேன் என சொன்னார் சீதா. ஆனால் திடீரென நடிக்க போகிறேன் என்று கேட்டார்.
அங்குதான் பிரச்சினை ஆரம்பமானது. நடிக்க போகிறேன் என்று சொல்கிறாரே.. அப்போ இந்த வாழ்க்கை போரடித்துவிட்டதோ என்று எனக்கு நினைக்க தோன்றியது. இப்படித்தான் எங்களுக்குள் பிரச்சினை ஆரம்பித்தது. பிரிந்துவிட்டோம். ஆனால் இப்போது வரை இருவருமே அதே அன்பு, காதல் , பாசத்துடனேயேதான் இருக்கிறோம் என்று கூறியுள்ளார். மேலும் இந்தளவு தமிழில் எள்ளி நகையாடிகிறேன் என்றால் அதற்கு காரணம் என்னுடைய குருவாகிய என்னுடைய அப்பாதான் என்று கூறியுள்ளார்.
வீட்டில் தெலுங்குதான் பேசுவார்களாம். வெளியே வந்தால்தான் தமிழில் உரையாடுவார்களாம். அதனால் தமிழில் பேசவேண்டுமென்றால் நன்கு கற்று பேச வேண்டும். வாய்க்கு வந்ததை பேசக் கூடாது என தனியே க்ளாஸ் எல்லாம் அனுப்பியிருக்கிறார் பார்த்திபனின் தந்தை. அந்த நேரத்தில் ரஜினி, விஜயகாந்த் எல்லாம் மிகப்பெரிய நடிகர்கள். ஆனால் அவர்கள் தமிழ் சுத்தமாக இருக்காது.
ரஜினி பேசுகிற மாதிரி விஜயகாந்த் பேசுகிற மாதிரி எல்லாம் உன்னுடைய தமிழ் இருக்கக் கூடாது என்று அடிக்கடி அவருடைய அப்பா சொல்வாராம். அதனால் வல்லினம் மெல்லினம் எல்லாம் கற்றதாக கூறினார். பெரும்பாலும் தெலுங்கு பேசுகிறவர்களின் தமிழ் தான் அழகாக இருக்கும். பயங்கரமாக தமிழ் பேசுகிறவர்களை விட என்னுடைய தமிழ் அழகாக இருக்கும் என்றும் அந்த பேட்டியில் பார்த்திபன் கூறியுள்ளார்.