அடுத்த பொங்கலுக்கு பிளான் பண்ணும் வாடிவாசல்!.. வெற்றிமாறன வச்சு இதெல்லாம் சாத்தியமா?..
Vadivasal: தமிழ் சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமாக இருப்பது வாடிவாசல். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்த திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது. வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கலைப்புலி தாணு தயாரிப்பில் இப்படத்தை எடுப்பதற்கு முடிவு செய்து படமும் தொடங்கப்பட்டது.
அதன் பிறகு இந்த திரைப்படம் தொடர்பான எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாமல் இருந்து வந்தது. இதற்கு இடையில் நடிகர் சூர்யா கங்குவா திரைப்படத்தில் நடிப்பதற்கு சென்றுவிட்டார். நடிகர் சூர்யா கடந்த இரண்டு வருடங்களாக சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து வந்தார்.. இந்த திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே கடும் விமர்சனங்களை சந்தித்தது.
பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தோல்வியை தழுவியது. இது ஒரு புறம் இருக்க இயக்குனர் வெற்றிமாறனும் விடுதலை திரைப்படத்தின் பாகங்களை இயக்குவதற்கு சென்றுவிட்டார். முதலில் விடுதலை திரைப்படம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை கொடுத்த நிலையில் இதன் இரண்டாவது பாகத்தை இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்கள் வெளியே கலவையான விமர்சனங்களை சந்தித்தது.
அடுத்ததாக தற்போது வாடிவாசல் திரைப்படத்தின் கதையை தயார் செய்வதில் முழு கவனத்தையும் செலுத்தி வருகின்றார் இயக்குனர் வெற்றிமாறன். நடிகர் சூர்யாவும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அடுத்ததாக ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தில் நடித்து முடித்த கையோடு வாடிவாசல் திரைப்படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அந்த வகையில் வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கின்றது. இந்த திரைப்படத்தை மூன்று பாகங்களாக இயக்குவதற்கு முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகின்றது. இதில் முதல் பாகம் ஏப்ரல் மாதம் தொடங்கி டிசம்பர் மாதத்திற்குள் முடித்து அடுத்த ஆண்டு பொங்கலுக்கு படத்தை ரிலீஸ் செய்வதற்கு திட்டமிட்டு இருக்கிறார்கள்.
காரணம் இந்த திரைப்படம் ஜல்லிக்கட்டு கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருவதால் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்தால் தான் சரியாக இருக்கும் என்று முடிவு செய்து இருக்கிறார்களாம். அதனால் இந்த திரைப்படத்தை விரைந்து எடுப்பதற்கு தேவையான பிரீ ப்ரோடுக்ஷன் பணிகள் அனைத்துமே விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
இந்த செய்தி கோலிவுட் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் படத்தை குறிப்பிட்ட தேதிக்குள் எடுத்து முடித்து விடுவாரா? என்கின்ற சந்தேகம் எழுந்திருக்கின்றது. ஏனென்றால் ஒரு திரைப்படத்தை இயக்குகிறார் என்றால் அதற்கு நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்வார்.
விரைந்து எடுப்பது என்பது அவரது அகராதியிலேயே இருந்தது கிடையாது. அப்படி இருக்கும் சூழலில் இந்த திரைப்படத்தை மட்டும் அவர் விரைந்து முடித்துவிடுவாரா? என்கின்ற சந்தேகம் எழுந்திருக்கின்றது. விடுதலை திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தையே 40 நாட்களில் எடுக்கிறேன் என்று கூறி கிட்டத்தட்ட ஒரு வருடம் எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.