எஸ்.கே, தனுஷ், சிம்பு எல்லாம் காலி!.. 3 படங்களில் உச்சத்துக்கு போன பிரதீப் ரங்கநாதன்...

Pradeep Ranganathan: சினிமாவில் எப்போது யார் உச்சத்துக்கு போவார்கள் என கணிக்கவே முடியாது. ஒரு சூப்பர் ஹிட் கொடுத்தாலே அவரை தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். தொடர்ந்து 3 சூப்பர் ஹிட்டை கொடுத்துவிட்டால் அவர்தான் சூப்பர்ஸ்டார். துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், திருடா திருடி ஆகிய 3 படங்களும் தொடர் ஹிட் ஆன போது தனுஷை கோலிவுட் கொண்டாடியது. தற்போது அந்த அந்தஸ்து குட்டி தனுஷ் பிரதீப் ரங்கநாதனுக்கு கிடைத்திருக்கிறது.
சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்தான் பிரதீப் ரங்கநாதன். சினிமா மீது இருந்த ஆசையில் அப்பாவிடம் கூட சொல்லாமல் ஐடி வேலையை விட்டவர் இவர். சில குறும்படங்களை இயக்கிவிட்டு ஜெயம் ரவியை வைத்து கோமாளி படத்தை இயக்கினார். முதல் படமே சூப்பர் ஹிட். ‘இனிமேல் நான் இயக்கும் படத்தில் நான்தான்’ என முடிவு செய்து 3 வருடங்கள் உழைத்து ஒரு கதையை உருவாக்கி லவ் டுடே என்கிற படத்தை எடுத்தார். படமோ சூப்பர் ஹிட்.
நடிகராகவும் வெற்றி பெற்றார் பிரதீப். இதில் ஆச்சர்யம் என்னவெனில் தெலுங்கு சினிமா ரசிகர்களும் அவரை கொண்டாடினார்கள். குறிப்பாக 20-25 வயதுடைய இப்போது ஜென் சி (Gen Z) என அழைக்கப்படும் இளசுகள் தங்களை பிரதீப்போடு கனெக்ட் செய்து கொள்கிறார்கள். தங்களையே திரையில் பார்ப்பது போல அவர்கள் உணர்வதே பிரதீப்பின் படங்கள் ஹிட் அடிப்பதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
8 கோடியில் உருவான லவ் டுடே 90 கோடி வரை வசூல் செய்தது. அடுத்து வெளியான டிராகன் 100 கோடி வசூலை தொட்டது. தற்போது வெளியாகியுள்ள டியூட் படம் 4 நாட்களில் 80 கோடி வசூலை தாண்டிவிட்டது. நாளைக்கு இப்படம் 100 கோடி வசூலை தாண்டிவிடும் என கணிக்கப்படுகிறது.
சிவகார்த்திகேயன் திடீரென வந்து அவரின் சீனியர்களான தனுஷ், சிம்பு, சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி, விக்ரம் உள்ளிட்ட பலரையும் ஓவர்டேக் செய்து அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறினார். தற்போது சிவகார்த்திகேயனை பிரதீப் ரங்கநாதன் ஓவர்டேக் செய்திருக்கிறார். ஆனால், சம்பளத்தில் இல்லை. மதராஸி படம் 3 நாட்களில் 61 கோடி வசூல், ஆனால், டியூட் படம் 3 நாட்களில் 66 கோடி வசூல் செய்தது. 4 நாட்களில் 83 கோடி வசூலை அள்ளியிருக்கிறது. எப்படியும் இந்த வார இறுதி வரை இந்த படத்திற்கு வசூல் வரும். அப்படிப்பார்த்தால் மதராஸி படத்தின் மொத்த வசூலையும் டியூட் படம் நாளை தாண்டிவிடும்.
அதுமட்டுமல்ல, ஓவர் சீஸ் என சொல்லப்படும் வெளிநாடுகளிலும் பிரதீப் ரங்கநாதன் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. ஓவர் சீஸ் உரிமையை எடுத்துக்கொண்டால் தனுஷ் படங்களுக்கு 10 கோடி, சிவகார்த்திகேயன் படங்களுக்கு 11 கோடி கொடுத்து வாங்குகிறார்கள். ஆனால், பிரதீப் படங்களுக்கு 13 கோடி கொடுக்கிறார்களாம். டியூட் படத்தின் ஓவர் சீஸ் உரிமையை வாங்கியிருப்பவருக்கு 7 கோடி வரை லாபம் கிடைக்கும் என்கிறார்கள்.