தனுஷ் Vs அஜித்.. இது முதல் தடவை இல்ல ஏற்கனவே 2 முறை மோதிருக்காங்க.. இதோ ஒரு பார்வை!..

by Ramya |   ( Updated:2025-01-07 15:30:26  )
ajith vs dhanush
X

ajith vs dhanush

Ajith Vs Dhanush: தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒரு பண்டிகை காலங்களில் பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் ஒன்றுக்கொன்று மோதிக் கொள்வது வழக்கம்தான். அந்த காலத்தில் ரஜினி, கமல் தொடங்கி பின்னர் விஜய், அஜித் என பல முன்னணி பிரபலங்களின் படங்கள் ஒரே நாளில் திரையரங்குகளில் வெளியாகி இருக்கின்றது. அப்படி இந்த ஆண்டு நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படமும், நடிகர் தனுஷின் இட்லி கடை திரைப்படமும் ஏப்ரல் 10ம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாக இருக்கின்றது.

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்தும் சரி தனுஷும் சரி தனக்கென ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கிறார்கள். இவர்களின் திரைப்படங்களை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகிறார்கள். நடிகர் தனுஷ் தற்போது இயக்கத்தில் கவனம் செலுத்தி வரும் நிலையில் தனது 54 வது படமான இட்லி கடை திரைப்படத்தை தானே இயக்கி ஹீரோவாக நடித்திருக்கின்றார்.


இப்படம் ஏப்ரல் 10ம் தேதி வெளியாக இருப்பதாக கடந்த ஆண்டு அறிவிப்பு வந்துவிட்டது. இந்நிலையில் நடிகர் அஜித் நடித்திருக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தை முதலில் பொங்கல் பண்டிகைக்கு வெளியிடுவதற்கு திட்டமிட்டு இருந்த நிலையில், விடாமுயற்சி திரைப்படம் வர இருந்ததால் இந்தத் திரைப்படத்தை மே மாதத்திற்கு தள்ளி வைத்திருந்தார்கள்.

ஆனால் தற்போது திடீரென்று படக்குழுவினர் இப்படத்தை ஏப்ரல் 10ம் தேதி வெளியிடுவதற்கு முடிவு செய்து இது தொடர்பான அறிவிப்பை நேற்று வெளியிட்டிருக்கிறார்கள். இது தனுஷ் ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்நிலையில் நடிகர் அஜித் மற்றும் தனுஷ் திரைப்படங்கள் மோதிக் கொள்வது இது முதல் முறை கிடையாது. ஏற்கனவே இரண்டு முறை இவர்களின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகி இருக்கின்றது. அது குறித்து இதில் நாம் தெரிந்து கொள்வோம்.

அட்டகாசம் vs ட்ரீம்ஸ்:

இயக்குனர் சரண் இயக்கத்தில் அஜித் இரண்டு வேடங்களில் நடித்து 2004 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியான திரைப்படம் அட்டகாசம். அதே நாள் கஸ்தூரிராஜா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ட்ரீம்ஸ். இதில் அட்டகாசம் திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்த நிலையில் ட்ரீம்ஸ் திரைப்படம் தோல்வி படமாக அமைந்தது.

என்னை அறிந்தால் vs ஷமிதாப்:

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் அஜித், திரிஷா, அனுஷ்கா ஆகியோர் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி வெளியான திரைப்படம் என்னை அறிந்தால். இந்த திரைப்படம் வெளியான மறுநாள் பிப்ரவரி 6ம் தேதி தனுஷ் நடிப்பில் உருவான ஷமிதாப் திரைப்படம் வெளியானது. இயக்குனர் பால்கி இயக்கத்தில் அமிதாப் மற்றும் தனுஷ் நடிப்பில் வெளியான ஷமிதாப் திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. என்னை அறிந்தால் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது.

இப்படி நடிகர் தனுஷ் அஜித்துடன் மோதிய இரண்டு திரைப்படங்களும் தோல்வி படமாக அமைந்திருக்கின்றது. இந்நிலையில் தற்போது குட் பேட் அக்லி மற்றும் இட்லி கடை படங்கள் வரும் ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில் எந்த திரைப்படம் வெற்றி படமாக அமையப் போகின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Next Story