எம்.எஸ்.வி பாட்ட இளையராஜா சுடலாம்!. மத்தவங்க பண்ணக்கூடாதா?!. கங்கை அமரனுக்கு பதிலடி!...

by MURUGAN |
gangai amaran
X

Ilayaraja: சமீபகாலமாகவே இசையமைப்பாளர் இளையராஜாவின் பழைய பாடல்களை பலரும் தங்களின் படங்களில் பயன்படுத்துவதையும், அதற்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்புவதும் தொடர்கதையாகிவிட்டது. தன்னுடைய அனுமதியுடன் பாடல்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என இளையராஜா நினைக்கிறார்.

ஆனால், அந்த பாடல்களின் உரிமையை பெற்ற ஆடியோ நிறுவனங்களிடம் என்.ஓ.சி பெற்று பலரும் தங்களின் படங்களில் பயன்படுத்துகின்றனர். அந்த பாடல்களை உருவாக்கிய இசையமைப்பாளர் என்கிற முறையில் என்னிடம் அனுமதி வாங்க வேண்டும் என்பது இளையராஜாவின் வாதமாக இருக்கிறது.


ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து ஜிவி பிரகாஷ் இசையமைத்த குட் பேட் அக்லி படத்தில் இளையராஜாவின் 3 பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருந்தது. இதற்கு நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பினார் இளையராஜா. இது தொடர்பாக ஒரு விழாவில் பேசிய இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் ‘7 கோடி சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர்களும் அண்ணணின் பாடல்களைத்தான் பயன்படுத்துகிறார்கள். அதுபோன்ற பாடலை உங்களால் போட முடியவில்லை. அப்படி பயன்படுத்தப்படும் போது காசு கொடுத்துதான் ஆக வேண்டும். இளையராஜாவின் பாடல்களை போட்டால்தான் உங்கள் படம் ஓடுகிறது’ என பேசியிருந்தார்.

இதற்கு பதில் சொன்ன கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி ‘அப்பா பேசுவதை ஏற்க முடியாது. தல படம் ஓடுவது அவருக்காக மட்டுமே. நான் அண்ணனுக்கு (அஜித்துக்கு) ஆதரவாக எப்போதும் இருப்பேன் என தெரிவித்தார். இந்நிலையில், ஒரு விழாவில் பேசிய தயாரிப்பாளர் தேனப்பன் கங்கை அமரனுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.


ஜிவி பிரகாஷ் 7 கோடி சம்பளம் வாங்குறாரு. ஆனா இளையராஜா பாடல்களைத்தான் பயன்படுத்துறிங்கனு கங்கை அமரன் பேசியிருந்தார். ஏதோ ஜிவி பிரகாஷுக்கு இசையமைக்கவே தெரியாது என்பது போல பேசியிருந்தார். ஜிவி பிரகாஷ் தங்கமான மனிதர். எத்தனையோ பிரச்சனைகளில் ஜிவி பிரகாஷ் விட்டுக்கொடுத்திருக்கிறார். அவர் 7 கோடி வாங்குறது கங்கை அமரனுக்கு வயித்தெரிச்சல். சமீபத்தில் கூட ஒரு படம் ரீலீஸாவதற்காக தனது சம்பளத்தை ஜிவி பிரகாஷ் விட்டு கொடுத்தார்.

குட் பேட் அக்லி படத்தில் ராஜா சார் பாடலை பயன்படுத்தியது படத்தின் இயக்குனரின் விருப்பம். இதில், ஜிவி பிரகாஷுக்கு சம்பந்தம் இல்லை. பிதாமகன் படத்தில் எம்.எஸ்.வி பாடல்களை பயன்படுத்தி இருப்பார்கள். இதற்கு இளையராஜா பொறுப்பேற்பாரா?’ என பதிலடி கொடுத்திருக்கிறார்.

Next Story