1500 கோடி வசூலை தாண்டிய 3 திரைப்படங்கள்!.. பாகுபலி 2-வை தாண்டுமா புஷ்பா 2?....
Pushpa 2: 80களில் திரைப்படங்களில் சில லட்சங்களில் மட்டுமே தயாரானது. அதிக பட்சம் 15 அல்லது 20 லட்சத்தில் ஒரு படத்தை எடுப்பார்கள். ஹீரோக்களின் சம்பளமும் ஒரு லட்சம் மட்டுமே இருந்தது. அதுவும் ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களுக்குதான். மற்ற நடிகர்களுக்கு அதற்கும் குறைவான சம்பளமே கொடுக்கப்பட்டது.
90களில் இயக்குனர் ஷங்கர், தயாரிப்பாளர் குஞ்சுமோன் போன்றவர்கள் வந்து அதிக பட்ஜெட்டுக்களில் படங்களை உருவாக்கினார்கள். ஜென்டில்மேன், காதலன், ஜீன்ஸ், இந்தியன் என கோடிகளை கொட்டி படங்களை எடுத்தார்கள். இப்போது பல நூறு கோடி பட்ஜெட்டுகளில் படங்கள் உருவாவதற்கு விதை போட்டவர் ஷங்கர்தான். 90களிலேயே பல கோடிகளில் படமெடுத்தவர் இவர்.
அதனால்தான் ஷங்கர் சார்தான் என்னை போன்றவர்களுக்கு இன்ஸ்பிரேசன் என ராஜமவுலியே சொன்னார். பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்கள் எப்போது தெலுங்கு மட்டுமில்லாமல் தமிழ், ஹிந்தி போன்ற மொழிகளிலும் ஹிட் அடித்து வசூலை அள்ளியதோ அப்போதிலிருந்தே பேன் இண்டியா என்கிற வார்த்தை சினிமா உலகில் பிரபலமானது.
அதன்பின், கேஜிஎப், புஷ்பா, காந்தாரா, கேஜிஎப் 2, ஆர்.ஆர்.ஆர். போன்றவை பேன் இண்டியா படங்களாக வெளிவந்து பல மொழிகளிலும் வசூலை அள்ளியது. எனவே, இப்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் பெரிய நடிகர்கள் எல்லோருமே தங்களின் படங்கள் பேன் இண்டியா படமாக வரவேண்டும் என ஆசைப்படுகிறார்கள்.
ஏனெனில் அப்படி வெளியாகும் போது தங்களின் சம்பளமு பல கோடி உயரும் என்பதே அவர்களின் கணக்கு. அல்லு அர்ஜூனின் நடிப்பில் கடந்த வருடம் டிசம்பர் 5ம் தேதி வெளியான புஷ்பா 2 படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளிலும் வரவேற்பை பெற்று இதுவரை 1799 கோடி வசூலை பெற்றிருக்கிறது. அதுவும் படம் வெளியாகி 28 நாட்களில் இந்த சாதனையை செய்திருக்கிறது.
இதுவரை இந்திய சினிமாவில் 3 படங்கள் மட்டுமே 1500 கோடி வசூலை தாண்டியிருக்கிறது. அமீர்கான் நடிப்பில் 2016ம் வருடம் வெளிவந்த தங்கல் படம் உலக அளவில் 1950 கோடி வசூலை பெற்றதாக சொல்லப்படுகிறது. இந்த படம் சீனாவிலும் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்து ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி 2 படம் 1810 கோடி வசூலை பெற்றது. புஷ்பா 2 குறைவான நாட்களில் 1799 கோடி வசூலை அள்ளியிருக்கிறது. பாகுபலி 2-வின் வசூலை முறியடிக்க இன்னும் 11 கோடி மட்டுமே இருக்கிறது.