ரிலீஸுக்கு முன்பே 1000 கோடி! அசால்ட்டாக தட்டி தூக்கிய புஷ்பா 2!.. கெத்து காட்டும் அல்லு அர்ஜூன்..
Pushpa 2: தெலுங்கில் உருவான பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு படங்களில் தமிழ், ஹிந்தி மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று பல நூறு கோடிகளை வசூல் செய்தது. எனவே, தெலுங்கில் பிரபாஸ், அல்லு அர்ஜூன், மகேஷ் பாபு போன்ற நடிகர்கள் நடிக்கும் படங்கள் தொடர்ந்து பல மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி வந்தது.
கன்னடத்தில் இருந்தும் கேஜிஎப், கேஜிஎப் 2, கந்தாரா போன்ற படங்களும் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதில் அல்லு அர்ஜூனின் புஷ்பா திரைப்படமும் ஒன்று. தெலுங்கில் முன்னணி இயக்குனராக இருக்கும் சுகுமார் இயக்கிய திரைப்படம் இது.
செம்மரக்கட்டை கடத்தும் கும்பலை பற்றிய கதை இது. அதற்கு சுவாரஸ்யமாக கதை, திரைக்கதை அமைத்திருந்தார் சுகுமார். அதோடு, தனது அலட்டலான நடிப்பில் அசர வைத்திருந்தார் அல்லு அர்ஜூன். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ஸ்ரீதேவி பிரசாத் இசையமைத்திருந்தார்.
இந்த படம் பேன் இண்டியா அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது. எனவே, அந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. சுமார் 400 கோடி பட்ஜெட்டில் இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த படத்தை இயக்கும் போது அல்லு அர்ஜூனுக்கும், சுகுமாருக்கும் இடையே சில மனக்கசப்பு ஏற்பட்டு படப்பிடிப்பு தடைபட்டது.
எனவே, ரிலீஸ் தேதி 2 முறை அறிவித்து பின்னர் இறுதியாக டிசம்பர் 6ம் தேதி என அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே, பட வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. இந்த பாகத்தில் பஹத் பாசில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், புஷ்பா 2 திரைப்படம் ரிலீசுக்கு முன்பே 1000 கோடி வசூலை தொட்டிருக்கிறது.
திரையரங்க உரிமை மூலம் 640 கோடிக்கும், டிஜிட்டல் உரிமை மூலம் 275 கோடிக்கும், இசை உரிமை 65 கோடிக்கும், சாட்டிலைட் உரிமை 85 கோடிக்கும் விலை போயிருக்கிறது. ரிலீசுக்கு முன்பே 1000 கோடி எனில் தியேட்டரில் வெளியான பின் உலகமெங்கும் இந்த படம் எவ்வளவு வசூலை அள்ளும் என தெரியவில்லை. எப்படியும் இப்படம் 1500 கோடி வசூலை தாண்டும் என்றே நம்பலாம்.