அல்லு அர்ஜுனுக்கு அடுத்த சிக்கல்!.. கூட்ட நெரிசலில் சிக்கிய 8 வயது சிறுவன் மூளை பாதிப்பு!..

by Ramya |   ( Updated:2024-12-18 15:08:07  )
pushpa
X

pushpa 

புஷ்பா 2: இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஸ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் நடிப்பில் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகின்றது புஷ்பா 2 திரைப்படம். முதல் பாகத்துக்கு கிடைத்த வெற்றியை காட்டிலும் இரண்டு மடங்கு இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் தங்களது ஆதரவுகளை கொடுத்து வருகிறார்கள்.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. ரிலீசான 13 நாட்களில் மட்டும் இந்தியாவில் 1100 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகின்றது. நிச்சயம் இந்த திரைப்படம் 2000 கோடி வசூலை எட்டும் என்று படக்குழுவினர் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் 4ம் தேதி இரவு ஹைதராபாத்தில் இருக்கும் சந்தியா திரையரங்கில் புஷ்பா 2 திரைப்படத்தின் பிரீமியர் காட்சி வெளியிடப்பட்டது. இந்த திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்பதற்காக 8 வயதான சாய் தேஜா என்பவர் தனது குடும்பத்துடன் சந்தியா திரையரங்குக்கு வந்திருந்தார். பிரீமியர் ஷோ பார்ப்பதற்கு அல்லு அர்ஜுன் அங்கு வந்திருக்கின்றார்.


எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் அல்லு அர்ஜுன் அங்கு வந்ததால் ரசிகர்கள் அவரை பார்ப்பதற்கு முந்தி அடித்துக் கொண்டு சென்றனர். அப்போது போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க வேண்டியதாக இருந்தது. அந்த சமயத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பாஸ்கரின் மனைவியான ரேவதி உயிரிழந்தார். பாஸ்கருக்கும் அவரது மகளுக்கும் லேசான காயம் ஏற்பட்ட நிலையில் அவரின் மகன் சாய் தேஜா படுகாயம் அடைந்தார்.

பின்னர் அவரை ஆம்புலன்ஸில் ஏற்றி சென்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வந்தது. சிறுவனின் மருத்துவ செலவுக்கு உதவி செய்வதாக புஷ்பா 2 படக்குழு தெரிவித்திருந்தது. இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சாய் தேஜா தற்போது மூளை சாவு அடைந்து விட்டதாக இன்று மதியம் செய்திகள் வெளியானது.

சிறுவன் சாய் தேஜா கிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அந்த மருத்துவமனைக்கு சென்ற ஹைதராபாத் கமிஷனர் சிவி ஆனந்த் இந்த செய்தியை மறுத்துள்ளார்.

சிறுவனுக்கு மூளை பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது எனவும், அந்த பாதிப்பு சரியாக நீண்ட நாட்கள் ஆகும் என மருத்துவர்கள் கூறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அந்த சிறுவன் தற்போது வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து அவர் சிகிச்சையில் இருப்பார் என ஹைதராபாத் காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

Next Story