என்னை அப்படி கூப்பிடாதீங்க!. நான் என்ன கசாப்பு கடையா வச்சிருக்கேன்?!.. ரஹ்மான் ஃபீலிங்...

AR Rahman: ரோஜா படம் மூலம் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரஹ்மான். மிகவும் சிறு வயதிலிருந்தே இசை தொடர்பான பணிகளை செய்தவர் இவர். இளையராஜாவிடம் 500க்கும் மேற்பட்ட படங்களில் வேலை செய்திருக்கிறார். இளையராஜா மட்டுமல்ல பல இசையமைப்பாளர்களிடமும் கீபோர்டு வாசிக்கும் வேலை செய்தவர் இவர்.
இவரின் அப்பா ஆர்.கே.சேகர் பல மலையாள திரைப்படங்களுக்கு இசையமைத்தவர். அவர் திடீரென இறந்துவிட்டதால் குடும்பத்தை கவனிக்கும் பொறுப்பு ரஹ்மானுக்கு வந்தது. அப்பா சொல்லிகொடுத்த இசை குடும்பத்தை வாழ வைத்தது. பலரிடம் வேலை செய்து அனுபவத்தில் விளம்பர படங்களுக்கு இசையமைக்க துவங்கினார்.
மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தில் இசையமைப்பாளராக இவர் கொடுத்த பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது. முதல் படத்திலேயே தேசிய விருதையும் பெற்றார். ரஹ்மானின் துள்ளலான இசை ரசிகர்களை ஆட்டம் போட வைத்தது. ஜென்டில்மேன், காதலன், ஜீன்ஸ், இந்தியன் என பட்டைய கிளப்பினார்.
ஒருபக்கம் ஹிந்திக்கும் போய் அதிர வைத்தார். இவரின் பாடல்கள் ஹாலிவுட் படங்களின் டைட்டிலிலும் பயன்படுத்தப்பட்டது. ஸ்லம்டாக் மில்லினியர் படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் வாங்கினார். இப்போதுவரை ஆஸ்கர் விருது பெற்ற ஒரே இசையமைப்பாளர் ரஹ்மான் மட்டுமே.
பொதுவாக இஸ்லாமியர்களை பாய் என சிலர் அழைப்பது போல சமூகவலைத்தளங்களில் ரஹ்மான் பற்றிய செய்திகளை ரசிகர்கள் பதிவிடும்போது பெரிய பாய் என குறிப்பிடுவார்கள். சமீபத்தில் ஒரு பேட்டியில் விஜய் டிவி டிடி அவரை ரஹ்மானை ‘பெரிய பாய்’ என அழைத்தார்.
இதைக்கேட்டு சிரித்த ரஹ்மான் ‘பெரிய பாயா?. வேணாம். எனக்கு இது பிடிக்கல.. சின்ன பாய். பெரிய பாய்-னு நான் என்ன கசாப்பு கடையா வச்சிருக்கேன்?’ என சிரித்துகொண்டே சொன்னார் இசைப்புயல். ரசிகர்களும் இதை புரிந்துகொண்டு ரஹ்மானை அப்படி அழைக்காமல் இருப்பதே நல்லது.