Dude.. Diesel.. Bison: தொடர் மழை!... தீபாவளி ரிலீஸ் படங்கள் கல்லா கட்டுமா?!...

தீபாவளி ரிலீஸ்: தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17ஆம் தேதியான நாளை மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன், ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள டீசல், பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டியூட் ஆகிய மூன்று படங்களும் தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறது. பொதுவாக தீபாவளி என்றாலே ரஜினி, விஜய், அஜித் போன்ற பெரிய நடிகரின் படங்கள் வெளியாகும். ஆனால் கடந்த சில வருடங்களாக அது குறைந்துவிட்டது. அதுவும் இந்த வருட தீபாவளிக்கு அவர்களின் எந்த படமும் வெளியாகவில்லை. இந்த வருட தீபாவளிக்கு இளம் நடிகர்கள் போட்டி போடுகிறார்கள்.
Bison: மாரி செல்வராஜின் வழக்கமான ஒரு சீரியஸ் சினிமாவாகவே பைசன் உருவாகியிருக்கிறது. இந்த படம் தனது திரை வாழ்வில் ஒரு முக்கிய படமாக அமையும் என துருவ் விக்ரம் நம்பி காத்துக் கொண்டிருக்கிறார். படத்தின் டிரெய்லரும் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது
. அனுபமா பரமேஸ்வரம், அமீர், பசுபதி, லால் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.
Diesel: இதுவரை காதல் கதைகளில் மட்டுமே நடித்து வந்த ஹரிஷ் கல்யாண் முதல்முறையாக டீசல் படம் மூலம் அதிரடி ஆக்சன் ஹீரோவாக மாறி இருக்கிறார். கடல் வழியாக டீசலை கடத்தும் கும்பல் பற்றிய கதை இது. இந்த படம் தனக்கு முக்கிய படமாக அமையும் ஹரிஸ் கல்யாண் காத்திருக்கிறார்.
Dude: ஒரு பக்கம் லவ் டுடே, டிராகன் ஆகிய படங்கள் மூலம் ஹீரோவாகவும் வெற்றி பெற்ற பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் Dude படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் இளைஞர்களுக்கு பிடித்த மமிதா பைஜு கதாநாயகியாக நடித்திருக்கிறார். சாய் அபயங்கர் இசையில் உருவான இந்த படமும் தீபாவளி விருந்தாக நாளை வெளியாகிறது.
பொதுவாகவே நவம்பர், டிசம்பர் மாதங்களில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்யும். எவ்வளவு பெரிய நடிகர்களின் படமாக இருந்தாலும் மழை தொடர்ந்து பெய்தால் தியேட்டர்களில் கூட்டம் இருக்காது. இதனால் வசூல் பாதிக்கும். மழை காரணமாகவே பல பெரிய நடிகர்களின் படங்களே ஓடாமல் போயிருக்கிறது.
இந்நிலையில்தான் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று துவங்கியிருக்கிறது. தமிழகத்தில் 25க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று கடுமையான மழை பெய்யும். தொடர்ந்து சில நாட்கள் மழை இருக்கும் என வானிலை மையம் நேற்று அறிவித்துவிட்டது. எனவே, இன்னும் ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்யும் என கருதப்படுகிறது. பைசன், ட்யூட், டீசல் ஆகிய 3 படங்களும் நாளை வெளியாகவுள்ள நிலையில், இந்த படங்களின் வசூல் மழையால் பாதிக்க வாய்ப்பு இருப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.
என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!..