Rajinikanth: நடிகர் சங்கத்துக்கு ஒத்த பைசா கொடுக்காத ரஜினி!.. கிழிக்கும் பிரபலம்!…
கோலிவுட்டுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் பல வருடங்களாகவே செயல்பட்டு வருகிறது. இதில் நடிகர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள், இந்த சங்கத்திற்கு எம்ஜிஆர், சிவாஜி, விஜயகாந்த், சரத்குமார், உள்ளிட்ட பலரும் தலைவர்களாக இருந்திருக்கிறார்கள்.
நடிகர் சங்கத்தை கைப்பற்றிய நாசர் டீம்:
சரத்குமார் தலைவராகவும், ராதாரவி செயலாளராகவும் இருந்தபோது அவர்களின் செயல்பாடுகளில் அதிர்ச்சி அடைந்த நாசர், விஷால், கார்த்தி போன்றவர்கள் அவர்களுக்கு எதிராக களம் இறங்கி தேர்தலை நடத்த வைத்து அதில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். தற்போது நடிகர் சங்க தலைவராக நாசர் இருக்கிறார். கார்த்தி பொருளாளராகவும். விஷால் செயலாளராகவும் இருக்கிறார்.
இந்த டீம் எப்போது நடிகர் சங்கத்தை கைப்பற்றியதோ அப்போது நடிகர் சங்க கட்டிடத்தை விரைவில் கட்டி முடிப்போம் என அறிவித்தார்கள். அதோடு ஒரு படி மேலே போய் ‘எனது திருமணம் நடிகர் சங்க கட்டிடத்தில்தான் நடக்கும்’ என விசால் அறிவித்தார். ஆனால் அது நடந்து பல வருடங்கள் ஆகியும் கட்டிடம் முடிக்கப்படாமல் இருந்தது.
நிதி கொடுத்த நடிகர்கள்:
நடிகர் சங்கம் கட்டிடத்திற்காக நிதியும் திரட்டப்பட்டது. அதில் கமல்ஹாசன் 2 கோடி, நடிகர் விஜய் ஒரு கோடி, சூர்யா ஒரு கோடி, உதயநிதி ஸ்டாலின் ஒரு கோடி, சிவகார்த்திகேயன் 50 லட்சம் என பலரும் நிதி அளித்தார்கள். கடந்த சில வருடங்களாக கட்டிட வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்னும் சில மாதங்களில் அது முடிவுக்கு வரும் என சொல்லப்படுகிறது. நேற்று கூட இது தொடர்பாக நாசரின் டீம் செய்தியாளர்களை சந்தித்தது.
ஒரு ரூபாய் கூட கொடுக்காத ரஜினி:
இந்நிலையில் பிரபல சினிமா செய்தியாளர் வலைப்பேச்சு அந்தணன் ஊடகம் ஒன்றில் பேசிய போது ‘நடிகர் ரஜினிக்கு வாழ்வு கொடுத்தது தமிழ் சினிமாதான். என்னை வாழவைத்த தமிழ்நாடு என்றெல்லாம் பேசுகிறார். ஆனால் அவரை வாழவைத்த தமிழ் சினிமா தொடர்பான நடிகர் சங்க கட்டத்திற்கு அவர் ஒரு ரூபாய் கூட நிதி உதவி அளிக்கவில்லை. சிவகார்த்திகேயன் கூட 50 லட்சம் கொடுக்கும் போது ரஜினி எல்லாம் 5 கோடி கொடுக்க வேண்டும். ஆனால் அவர் அதை செய்யவில்லை’ என பேசி இருக்கிறார்.
நடிகர் சங்க கட்டடத்திற்கு ரஜினி நன்கொடை ஏதும் கொடுக்கவில்லை என்பது உண்மை என்றாலும் நடிகர் சங்க உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையை ரஜினி கொடுத்திருக்கிறார். இதற்காக நேற்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் ரஜினிக்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
