ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன், அஜித்!.. இந்த மாசம் வரும் 4 முக்கிய அப்டேட்!....
கோலிவுட்டில் ரஜினி, விஜய், அஜித், சிவகார்த்திகேயன் ஆகியோர் முன்னணி நடிகர்களாக இருக்கிறார்கள். ரஜினியை பொறுத்தவரை கூலி படத்திற்கு பின் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 2026 பிப்ரவரி மாதம் முடிவடைகிறது. இந்த படத்திற்கு பின் சுந்தர்.சி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த மாதம் வெளியாகவுள்ளது.
விஜயை பொறுத்தவரை ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்கிற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ஒருபக்கம், தீவிர அரசியலிலும் ஈடுபட துவங்கிவிட்டார். கரூர் சம்பவம் ஒரு மாதத்திற்கு மேல் விஜயை முடக்கிப்போட்டிருந்த நிலையில் அதில் பாதிக்கப்பட்டவர்களை சமீபத்தில் நேரில் வரவழைத்து ஆறுதல் சொன்னார். அதற்கு பின் அவரின் அரசியல் நடவடிக்கைகள் சூடுபிடிக்க துவங்கியிருக்கிறது. ஒருபக்கம், ஜனநாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தொடர்பான அப்டேட் இந்த மாதம் வெளியாகவுள்ளது. அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலை விஜயே பாடியிருக்கிறார்.
குட் பேட் அக்லி படத்திற்கு பின் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். அதேநேரம் அஜித் 185 கோடி வரை சம்பளம் கேட்டதால் இழுபறி நீடித்து அதன்பின் 2 கோடி குறைத்து அஜித்தின் சம்பளம் 183 கோடியாக குறைந்தது. ஒருபக்கம் அஜித் கார் ரேஸில் இருந்ததால் இதுவரை படத்தின் அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில், இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த மாதம் வெளியாகும் என்கிறார்கள்.
சிவகார்த்திகேயனின் மதராஸி படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஒருபக்கம், சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். 1960 கால கட்டங்களில் தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றிய கதை இது. இந்த கதையில் நடித்தால் ஹிந்தி பக்கம் போக முடியாது என யோசித்த சூர்யா படத்திலிருந்து விலகிவிட சிவகார்த்திகேயன் நடிக்க முன்வந்தார். ரவி மோகன், அதர்வா ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். பராசக்தி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இந்த மாதம் வெளியாகவுள்ளது. படம் அடுத்த ஜனவரி 14ம் தேதி ரிலீஸாகிறது.
