சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நிலை என்ன? அப்போலோ வெளியிட்ட திடீர் அறிக்கை…
Rajinikanth: நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அப்பலோ மருத்துவமனை அவரின் நிலை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இன்னும் சில தினங்களில் அவர் நடிப்பில் உருவாகி இருக்கும் வேட்டையன் திரைப்படம் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு திடீர் உடல்நிலை காரணமாக ரஜினிகாந்த் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கு முன்னரே சிறுநீரகப் பிரச்சினை ஏற்பட்ட நிலையில் தற்போது அவருக்கு இருதயத்தில் ரத்தக்குழாய் அடைப்பு என கூறப்படுகிறது.
இதற்கான அறுவை சிகிச்சை காலையில் நடந்து முடிந்திருக்கும் நிலையில் அவர் நலமுடன் இருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் அப்பல்லோ நிறுவனம் தற்போது ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், ரஜினிகாந்த் 30 செப்டம்பர் 2024 அன்று கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது இதயத்திலிருந்து வெளியேறும் பிரதான இரத்த நாளத்தில் வீக்கம் இருந்தது. இதற்கு அறுவை சிகிச்சை இல்லாமல் டிரான்ஸ்கேதீட்டர் முறை மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டது.
மூத்த இருதயநோய் நிபுணர் டாக்டர். சாய் சதீஷ், ஸ்டென்டை வைத்து வீக்கத்தை முழுவதுமாக சரி செய்து இருக்கிறார். அவரது நலம் விரும்பிகளுக்கும் ரசிகர்களுக்கும் திட்டமிட்டபடி இந்த நடைமுறை நடந்தது என்பதை தெரியப்படுத்த விரும்புகிறோம். ரஜினிகாந்த் நலமாக இருக்கிறார். இரண்டு நாட்களில் அவர் வீட்டிற்கு திரும்புவார் எனக் கூறப்பட்டுள்ளது.