அதிநவீன தொழில்நுட்பத்துடன் ரீ ரிலீஸாகும் எம்ஜிஆர் படம்... டிரெய்லரே மாஸ் காட்டுதே!

தமிழ்த்திரை உலகில் மக்கள் திலகம், புரட்சித்தலைவர், பொன்மனச் செம்மல் என்றாலே சட்டென்று நம் நினைவுக்கு வருபவர் எம்ஜிஆர்தான். இவரது படங்கள் எத்தனை முறை ரிலீஸ் ஆனாலும் சலிக்காது. அந்த வகையில் இப்போது ரீ ரிலீஸாக உள்ள படம் என்னன்னு பார்க்கலாமா...
1975ல் எம்ஜிஆர், ராதாசலுஜா இணைந்து நடித்த படம் இதயக்கனி. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் இடம்பெற்ற நீங்க நல்லா இருக்கணும் பாடல் கட்சியின் கொள்கைப் பாடலாகவே மாறிப்போனது. இப்போது எங்கு கூட்டம் நடந்தாலும் கூட இந்தப் பாட்டைத் தான் போட்டு எம்ஜிஆர் மாதிரி வேஷம் போட்டு ஆடுவார்கள்.
இந்தப் படம் அந்த வகையில் எம்ஜிஆரின் அரசியல் பயணத்துக்கு உறுதுணையாகவே இருந்தது. படத்தில் மனோகர், தேங்காய்சீனிவாசன், ஐசரிவேலன், வெண்ணிற ஆடை நிர்மலா, பண்டரிபாய், ராஜசுலோசனா உள்பட பலர் நடித்துள்ளனர். மெல்லிசை மன்னர் எம்எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ளார். இன்பமே உந்தன் பேர் பெண்மையோ என்ற பாடல் அவ்வளவு அழகு... அவ்வளவு அற்புதம்... எப்போது கேட்டாலும் மனதை வசீகரிக்கக்கூடியது.
படத்தில் கூலிங்கிளாஸ் மஞ்சள் சட்டை சகிதம் எம்ஜிஆர் வரும் காட்சிகள் எல்லாமே பட்டையைக் கிளப்பும் ரகங்கள்தான். 50 ஆண்டுகளைக் கடந்தும் இன்று வரை மக்கள் மனதில் நீங்காமல் இடம்பிடித்து வருகிறது. அந்த வகையில் எம்ஜிஆர் பேவை சார்பில் இந்தப் படம் மீண்டும் ரீ ரிலீஸாகிறது.
வரும் 4.7.2025ம் தேதி 100 திரையரங்குகளில் 4 கே டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் சினிமாஸ்கோப்பில் படம் வெளியாகிறது. சத்யா மூவீஸின் 60வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் இந்தப் படம் ரீ ரிலீஸ் ஆகிறது. உலக எம்ஜிஆர் பேரவை அமைப்புகள் இந்தப் படத்தை பெருமையுடன் வழங்குகிறது. பிரான்ஸ், புதுவை, அமீரக பேரவைகள் என்றும் டிரெய்லரில் டைட்டில் கார்டு போடப்பட்டுள்ளது.

'உழைக்கும் தொழிலாளர்களே, என் உடன்பிறப்புகளே, என் ரத்தத்தின் ரத்தமே' என்று எம்ஜிஆர் பேசும்போது மீண்டும் நாம் எம்ஜிஆர் காலகட்டத்தில் வாழும் உணர்வு உண்டாகிறது.
கூலித்தொழிலாளி ஒருவர் எங்க எஜமான் ஏழைகளுக்குக் கொடுத்து கொடுத்து கைசிவந்தவர் மட்டுமல்ல. கருணையைக் காட்டிக் காட்டி மனசும் சிவந்த பொன்மனச் செம்மல் ஐயா அவரு என்று சொல்லும் போது ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் ஒரு பரவச உணர்வு உண்டாகிறது என்றே சொல்லலாம்.
தேங்காய் சீனிவாசன் ஒரு காட்சியில் அவர் பாடியே புல்லட் ஃபரூப். துப்பாக்கியே அவருக்கிட்ட தோத்துருக்கு. தோட்டாவுக்கே டாட்டா காட்டினவர்தான் எங்க பாஸ்னு சொல்கிறார். அப்போது திரையரங்கில் விசில் பறப்பது நிச்சயம்.
படத்தின் டிரெய்லரைக் காண: https://www.youtube.com/watch?v=5qsTTEG6kw0