Rajini: ஆக்ஷன் படம் போதும்டா சாமி!.. ரஜினி எடுத்த முடிவு!. சுந்தர்.சி உள்ளே வந்த காரணம்!..
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான கூலி திரைப்படம் ரசிகர்களை பெரிய அளவில் கவரவில்லை என்ற நிலையில் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. ஜெயிலர் முதல் பாகத்தை போலவே இதுவும் ரத்தம் தெறிக்கும் ஆக்சன் படமாகவே உருவாகி வருகிறது. இந்நிலையில் ரஜினியும் கமலும் இணைந்து நடிக்கவுள்ள படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கப் போகிறார் என்கிற செய்தி கடந்த பல நாட்களாகவே சினிமா உலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பேசப்பட்டு வருகிறது.
ஆனால் ரஜினி - கமல் இணைந்து நடிக்கவுள்ள படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவில்லை என்பதுதான் புதிய அப்டேட். ஏனெனில் லோகேஷ் சொன்ன ரத்தம் தெறிக்கும் ஆக்சன் கேங்ஸ்டர் கதை ரஜினிக்கு பிடிக்கவில்லை என்கிறார்கள். அதற்கு முக்கிய காரணம் இருக்கிறது. கபாலி படத்திலிருந்து தொடர்ந்து ஆக்சன் படங்களில் நடித்து வருகிறார் ரஜினி, இடையில் அண்ணாத்த எனும் செண்டிமெண்ட் கதையில் நடித்தாலும் அது ஒர்க் அவுட் ஆகவில்லை.
கபாலி, காலா, தர்பார், ஜெயிலர், வேட்டையன், கூலி என தொடர்ந்து ரஜினி நடித்த எல்லா படங்களிலுமே ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இது ரஜினிக்கு சலித்து போய்விட்டதாம். அதனால்தான் லோகேஷ் சொன்ன கதையில் நடிக்க அவருக்கு விருப்பமில்லை என சொல்லப்படுகிறது. அதனால்தான் சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்க முடிவெடுத்திருக்கிறார் ரஜினி.

அவர் இயக்கத்தில் நடிப்பதற்கு இரண்டு காரணங்கள் இருக்கிறது. ஒன்று சுந்தர்.சி ஜாலியான படங்களை எடுப்பவர். ரஜினியும் தற்போது அதுபோன்ற ஒரு கதையில் நடிக்க ஆசைப்படுகிறார். அடுத்து சுந்தர்.சி மிகவும் வேகமாக படமெடுப்பவர். ரஜினியை வைத்து அருணாச்சலம் படமெடுத்தவர் சுந்தர்.சி. தற்போது 28 வருடங்கள் கழித்து ரஜினியும், அவரும் மீண்டும் இணையவிருக்கிறார்கள்.
ஒருபக்கம், ரஜினியும் கமலும் இணையவுள்ள படத்தை நெல்சன் இயக்கப் போவது உறுதியாகியிருக்கிறது. ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் முடிவடைகிறது. 2026 ஜூலை இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். எனவே அதுவரை நெல்சன் பிஸி. அதன் பின்னர்தான் அவரால் ரஜினி - கமல் இணையும் படத்தில் கவனம் செலுத்த முடியும். அதன்பின் ஷூட்டிங் தொடங்க சில மாதங்கள் எடுக்கும். எனவேதான், அந்த இடைவெளியில் சுந்தர்.சி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து விடலாம் என ரஜினி முடிவெடுத்திருக்கிறாராம்.
