மீண்டும் பழைய டிராக்கிற்கு திரும்பும் சந்தானம்… இத்தனை படங்களா?
Santhanam: நடிகர் சந்தானம் மதகஜ ராஜா படத்தின் வெற்றிக்கு பின்னர் தன்னுடைய பழைய டிராக்கிற்கு திரும்பியிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவின் காமெடியன்களில் முக்கிய இடம் பிடித்தவர் சந்தானம். இவர் வருவதற்கு முன்னர் முக்கிய காமெடியன்களாக இருந்த வடிவேலு மற்றும் விவேக் இருவரும் தங்களுக்கென்ற தனி டிராக்கை படத்தில் உருவாக்கி அதில் தான் நடிப்பார்கள்.
ஆனால் சந்தானம் காமெடி படத்துடனே பயணம் செய்யும். அதுவே சந்தானத்தின் முதல் வெற்றியாக திரையுலகில் அமைந்தது. 2002 ஆம் ஆண்டு காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கினார் சந்தானம்.
அதைத்தொடர்ந்து அவருக்கு நிறைய வாய்ப்புகள் வந்தாலும் சம்திங் சம்திங் திரைப்படத்தில் தான் தனக்கென ஒரு தனி அடையாளத்தை பிடித்தார். அதைத்தொடர்ந்து, வல்லவன், ரெண்டு, அழகிய தமிழ் மகன், பொல்லாதவன் உள்ளிட்ட திரைப்படங்களில் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.
தமிழ் சினிமாவில் காமெடியனாக கலக்கிக் கொண்டிருக்கும்போது சந்தானம் ஹீரோவாக நடிக்க தொடங்கினார். முதல் சில திரைப்படங்கள் அதுவும் அவருக்கு வெற்றியாக அமைய தன்னுடைய டிராக்கை ஹீரோவாகவே மாற்றிக்கொண்டார். ஆனால் நாளடைவில் அது சந்தானத்தின் ரசிகர்களுக்கு பெரிய அளவில் ஏமாற்றமாக தான் அமைந்தது.
இருந்தும் சந்தானத்தின் திரைப்படங்கள் தொடர்ச்சியாக வெளியாகி வந்தாலும் அது அவரின் காமெடிக்கு கிடைத்த வரவேற்பு கூட கிடைப்பதில்லை என்பதுதான் உண்மை. இந்த நேரத்தில்தான் சமீபத்தில் 12 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் நடிப்பில் உருவான மதகஜ ராஜா திரைப்படம் ரிலீஸ் ஆனது.
இப்படத்தில் நடிகர் விஷாலின் நடிப்பிற்கு இணையாக சந்தானத்தின் காமெடியும் பாராட்டுகளைப் பெற்று இருக்கிறது. அதனால் சந்தானம் மீண்டும் காமெடியனாக நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதை தற்போது சந்தானமும் ஏற்றுக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரவிமோகன், ஆர்யா மற்றும் விஷால் உள்ளிட்டோரின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் காமெடியும் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் இடையில் விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.