சரத்குமார் ஆசை இன்னும் நிறைவேறலையே...! கண்டுகொள்வாரா ரஜினி?
சரத்குமார் அர்ச்சனா ஐஏஎஸ் என்ற படப்பிடிப்பில் நடித்துக் கொண்டு இருந்தார். அப்போது ஒரு பத்திரிகையாளர் அவரிடம் பேட்டி கண்டபோது ரஜினி குறித்து அவர் என்ன சொல்கிறார்னு பாருங்க.
எளிமையானவர். பண்பாளர். நல்லவர். குறிப்பாக மனிதர்களை மதிக்கத் தெரிந்த மாமனிதர் சூப்பர்ஸ்டார் ரஜினி. நான் பள்ளிப்பருவத்தில் எம்ஜிஆரின் தீவிர ரசிகராக இருந்தவன். பின்பு படிப்பு முடிந்து வேலை தேடும்போது கொஞ்சம் வேகம் குறைந்தது.
பதினாறு வயதினிலே: அப்போது ரஜினி சார் நடித்த பதினாறு வயதினிலே படத்தைப் பார்த்த போது அவரது நடிப்பு மீது ஒரு ஆர்வம் ஏற்பட்டது. ரஜினியின் ரசிகராகவும் மாறினேன். அவரது படங்கள் ஒன்றுவிடாமல் பார்த்து விடுவேன். புவனா ஒரு கேள்விக்குறி படத்தின் கிளைமாக்ஸில் ரஜினியின் நடிப்பு அபாரமாக இருக்கும்.
புவனா ஒரு கேள்விக்குறி: அதன்பிறகு அவர் ஒரு ஆக்ஷன் ஹீரோவாக ஸ்டைல் மன்னனாக நடித்து சூப்பர்ஸ்டாராக இன்று ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்கிறார். அவரது தர்மதுரை படத்தில்தான் இன்று புவனா ஒரு கேள்விக்குறி படத்துக்குப் பிறகு குணச்சித்திர நடிப்பைப் பார்த்து ரசித்தேன்.
இனி எந்த ஸ்டைலும் இல்லை: என்னுடைய பல படங்களில் என்னை அறியாமலேயே ரஜினி சாரின் ஸ்டைல் வந்துவிடும். அது தவிர்க்க முடியாத தர்மசங்கடமான சூழ்நிலை. நிற்பது, நடப்பது, உட்காருவது, தலையைக் கையால் கோரி விடுவது என அவர் எதையுமே விட்டு வைக்கவில்லை. எல்லா ஸ்டைலையும் ரஜினி சார் செய்துவிட்டார். எங்களைப் போன்ற வளரும் நடிகர்கள் செய்வதற்கு இனி எந்த ஸ்டைலும் இல்லை.
நான் படத்தயாரிப்பாளராக இருந்த போது வேறு நண்பருடன் ரஜினி சார் வீட்டுக்குச் சென்று கூட்டத்தோடு கூட்டமாக அமர்ந்து பார்த்து விட்டு வந்து இருக்கிறேன். நான் படத் தயாரிப்பில் இறங்கியபோது எனக்குக் கடன் தொல்லை அதிகமானது. அப்போது ஒரு நண்பர் என்னிடம் 'நீ ரஜினி சாரைப் பார்த்து கால்ஷீட் வாங்கு.
உன் கடன் அனைத்தையும் முடித்துவிடலாம்' என்று யோசனை கூறினார். என்னவோ அவரை எனக்கு நெருங்கி பேசி கால்ஷீட் கேட்கத் துணிவே இல்லை. இன்று நான் ஒரு நடிகனாக சில படங்களில் நடித்து வருகிறேன். வேலை கிடைச்சிடுச்சு படத்தின் வெற்றி விழாவில் ரஜினி தான் சிறப்பு விருந்தினர். அவர் எனக்கு பரிசும் வழங்கினார்.
எளிமை, தெய்வபக்தி: அது என் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்ச்சி. அவரது புகழ், அந்தஸ்தைப் பார்க்கும்போது அவர் எப்படி வேண்டுமானாலும் ஆடம்பரமாக வாழலாம். அவர் உடையிலும் சரி. ஆடம்பரத்திலும் சரி. ஒரு துறவியைப் போல எளிமையாக வாழ்ந்து வருகிறார். அவருடன் தனியாக அமர்ந்து பேசும் சந்தர்ப்பமோ, படங்களில் இணைந்து நடிக்கும் வாய்ப்போ எனக்கு இனனும் கிடைக்கவில்லை. எனக்கு தெய்வபக்தி மிகவும் அதிகம். அதைப் போலத்தான் ரஜினியும் தெய்வபக்தி கொண்டவர்.
நிம்மதியாக வாழ: ரஜினி சாரை வைத்து ஒரு படத்தைத் தயாரிக்கும் எண்ணத்தையும் நான் பல வருடங்களாக மனதில் வைத்து இருக்கிறேன். காரணம் பணம் சம்பாதிக்கும் எண்ணம் அல்ல. நான் பட்டிருக்கும் கடனை அடைத்து நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காகத் தான். அந்த பொன்னான நாளை எதிர்பார்த்துக் காத்துக்கிட்டு இருக்கிறேன் என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.