கூலியை எவ்வளவு அடிப்பீங்க? .. இனி தொட்றா பாக்கலாம்.. வரிந்து கட்டி வரும் பிரபலம்
இந்த வருடம் தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, அமீர்கான், உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், சௌபின் சாஹிர் போன்ற பிரம்மாண்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்திருப்பார்கள். பான் இந்தியாளவில் உருவான இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இந்த வருடத்தில் இதுவரை வெளிவந்த எந்த திரைப்படங்களும் பெயர் சொல்லும் அளவிற்கு பெரிதாக வெற்றி பெறவில்லை.
இண்டஸ்ட்ரி ஹிட் என ஒரு படம் கூட கொடுக்கவில்லை. கமல்ஹாசனின் தக் லைஃப் படம் அதை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படம் வந்த வேகத்தில் காணாமல் போனது. அதன் பிறகு மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் வெளியான கூலி திரைப்படமும் தொடர்ந்து நெகட்டிவ் ரிவ்யூக்களால் அடிக்கப்பட்டு வருகிறது. இருந்தபோதும் தற்போது வரை 500 கோடிக்கும் அதிகமான வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
தற்போது வரை ஜெயிலரை விட குறைவான வசூல் என்பதாலும் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகம் வருவதாலும் கூலி படத்திற்கு அடிமேல் அடி விழுகிறது. இதற்கெல்லாம் கூலி வெற்றி விழாவில் ரஜினி அடி கொடுப்பார் என்று மூத்த பத்திரிக்கையாளரும் சினிமா விமர்சகருமான செய்யாறு பாலு கூறியுள்ளார். மேலும் அதில் , ”என் நண்பர் ஒருவர் தியேட்டருக்கு குடும்பத்துடன் படம் பார்க்க சென்று இருக்கிறார். அவருடன் மகனும் சென்று இருக்கிறார் அவருக்கு 18 வயது. அங்கிருந்த திரையரங்க நிர்வாகிகள் கீழே அலுவலகத்திற்கு சென்று ஒரு விண்ணப்பம் பூர்த்தி செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள்”.
”இதற்கெல்லாம் காரணம் கூலி 'A' சர்டிபிகேட் வாங்கியதுதான். படத்தில் அவ்வளவு மோசமான காட்சிகள் எதுவுமே கிடையாது. தொடர்ச்சியாக கூலிப் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனம் கூறியவர்களுக்கு, இது ஒரு ஹிட்டு படம். 500 கோடிக்கும் அதிகமான வசூலை தமிழ் மக்கள் கொடுத்து இருக்கிறார்கள், உலக தமிழ் மக்கள் கொடுத்திருக்கிறார்கள். என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஒரு படத்திற்கு நெகட்டிவ் விமர்சனம் வந்தால் அது ஓடாது. மக்களும் நெகட்டிவ் விமர்சனம் கொடுக்கவில்லை. குறிப்பிட்ட ஒரு சிலர் பண்ணின வேலையால் இந்த படம் ஓடகூடாது என்று தப்பு கணக்கு போட்டார்கள். ஆனால் அதையும் தாண்டி படம் ஓடி ஹிட் அடித்து விட்டது”.
”திரையரங்க உரிமையாளர்கள் இந்த படத்தால் நிறைய சம்பாதித்தோம் என்று அவர்களே ஒப்புக் கொண்டுள்ளார்கள். இது எல்லாம் மீறி இந்த படத்தில் சிலர் வன்மத்தை விதைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதை எல்லாம் வேண்டாம் என்று அவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். செப்டம்பர் 5 சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் வெளியாக இருக்கிறது. இருந்தாலும் கூலி திரைப்படம் ஒரு சில திரையரங்கில் ஓடத்தான் போகுது. அதற்கு காரணம் மக்கள் கொடுத்த ஆதரவு தான்”. என்று கூறியுள்ளார்.
