11 நாட்களில் கேம் சேஞ்சர் வசூல் இவ்வளவுதான்!.. இனிமேலாவது மாறுவாரா ஷங்கர்?!..

by Murugan |
game changer
X

Director Shankar: அதிக பட்ஜெட் படங்களை எடுப்பதில் தவறு இல்லை. ஆனால், அது வெற்றி பெற்று தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுக்க வேண்டும். அதாவது படத்திற்கு செய்த செலவை விட சில மடங்கு அதிகமாக வசூலித்து கொடுக்க வேண்டும். அதுதான் ஒரு திரைப்படத்தின் வெற்றி. ஆனால், தன்னை பெரிய இயக்குனராக காட்டிக்கொண்டு தயாரிப்பாளர் தலையில் மிளகாய் அரைத்து பல நூறு கோடிகள் செலவு செய்ய வைத்து படத்தையும் ஃபிளாப் ஆக்கும் வேலையை சில இயக்குனர்கள் செய்து வருகிறார்கள்.

ஷங்கரை பொறுத்துவரை இதற்கு முன் அவர் எடுத்த படங்கள் எப்படியோ தப்பித்துவிட்டது. அதிலும் ‘ஐ’ படம் அப்படத்தை தயாரித்த ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு நஷ்டம் என்றே சொன்னார்கள். அதன்பின் அவர் இதுவரை எந்த படத்தையும் தயாரிக்கவில்லை. அந்த கோபத்தில்தான் ஷங்கர் அந்நியன் படத்தை இந்தியில் இயக்க சென்றபோது நீதிமன்றம் மூலம் கட்டையை போட்டார். காரணம் அந்நியன் படத்திற்கு ரவிச்சந்திரன்தான் தயாரிப்பாளர்.


பாகுபலி: ராஜமவுலியும் பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களை பிரம்மாண்டமாகவே எடுத்தார். ஆனால் செட் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் மூலம் எல்லா காட்சிகளையும் எடுத்தார். படத்திற்கு தேவையான செலவை மட்டுமே செய்து வெற்றிக்கு தேவையான எல்லாவற்றையும் படத்தில் வைத்து படத்தை வெற்றி பெற வைத்தார்.. பாகுபலி 2 படம் 1500 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. 400 கோடி செலவில் எடுக்கப்பட்ட புஷ்பா 2 1800 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. இதுதான் எல்லோருக்கும் லாபம்.

கேம் சேஞ்சர் வசூல்: ஆனால், ரசிகர்களை கவரும் கதையை எழுதாமல், படத்திற்கும் தேவையில்லாத செலவுகளை செய்து 450 கோடி பட்ஜெட்டில் ஷங்கர் எடுத்த கேம் சேஞ்சர் படம் பாக்ஸ் ஆபிசில் தோல்வி அடைந்திருக்கிறது. இந்தியாவில் இப்படம் 126.77 கோடியும், வெளிநாடுகளில் 54 கோடிகள் என மொத்தம் 190 கோடிகளை மட்டுமே வசூல் செய்திருக்கிறது.

ராம் சரண்: தொலைக்காட்சி மற்றும் சேட்டிலைட் உரிமை, பாடல்கள் உரிமை என சில கோடிகளை கழித்தாலும் கேம் சேஞ்சர் படம் அப்படத்தை தயாரித்த தில் ராஜுவுக்கு 100 கோடிக்கும் மேல் நஷ்டத்தை கொடுத்திருக்கும் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். படம் தோல்வி என்று தெரிந்தவுடன் ‘உங்களின் தயாரிப்பில் இன்னொரு படத்தில் நடித்து கொடுக்கிறேன்’ என வாக்குறுதி அளித்துவிட்டார் ராம் சரண்.


ஏற்கனவே இந்தியன் 2-வை காலி செய்துவிட்டு இப்போது கேம் சேஞ்சரையும் தோல்விப்படமாக கொடுத்திருக்கிறார் ஷங்கர். இந்த படத்தில் 5 பாடல் காட்சிகளுக்கு மட்டும் 85 கோடி வரை செலவு செய்திருக்கிறார். ஷங்கர் காலம் முடிந்துவிட்டது. இனிமேல் அவரின் படங்கள் ஓடாது என ரசிகர்கள் பேச துவங்கிவிட்டனர்.

இனிமேலாவது நல்ல கதைகள், கதைக்கு தேவையான பிரம்மாண்டம், குறைவான பட்ஜெட் என தயாரிப்பாளர்களுக்கு லாபம் கொடுக்கும் படங்களை கொடுக்கும்படி ஷங்கர் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையேல் கால ஓட்டத்தில் அவர் காணாமல் போய்விடுவார் என்றே சொல்லலாம்.

Next Story