கேம் சேஞ்சர் சோலி முடிஞ்சது.. அடுத்தது இந்தியன் 3 தான்.. ஷங்கர் போடும் பெத்த பிளான்!..
இயக்குனர் ஷங்கர்: பெரிய பட்ஜெட் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முத்திரையை பதித்து வைத்திருப்பவர் இயக்குனர் ஷங்கர். தமிழ் சினிமாவில் இவர் இயக்கிய பல திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கின்றது. பெரிய அளவு தோல்விகளை சந்தித்திராத இயக்குனர் ஷங்கர் இந்தியன் 2 திரைப்படத்தின் மூலமாக பெரிய அளவில் விமர்சனங்களை பெற்றார்.
இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே ட்ரோல் மெட்டீரியலாக மாறியது. கமல்ஹாசன் அவர்களை வைத்து இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கினார் ஷங்கர். இந்த திரைப்படம் 250 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில் படம் வெறும் 148 கோடி மட்டுமே வசூல் செய்திருந்தது. இந்தியன் 2 திரைப்படம் பெரியளவு நஷ்டத்தை சந்தித்தது. இதற்கிடையில் இயக்குனர் சங்கர் கேம் சேஞ்சர் என்கின்ற திரைப்படத்தை இயக்கி வந்தார்.
தெலுங்கில் பிரபல நடிகராக இருக்கும் ராம்சரண் இப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். மேலும் கியாரா அத்வானி, எஸ் ஜே சூர்யா, சமுத்திரகனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார். மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
வெளியான முதல் நாளே படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை சந்தித்தது. நேரடி தெலுங்கு திரைப்படமாக உருவாகி இருந்தாலும் தமிழ் மற்றும் பிற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. தமிழில் இந்த திரைப்படம் படுமோசமான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது. இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டு வந்த நிலையில் மொத்தம் தற்போது வரை 200 கோடியை கூட தொடவில்லை என்று கூறப்படுகிறது.
வரும் நாட்களிலும் பெரிய அளவு வசூல் இருக்காது என்று கூறப்படுகின்றது. இப்படி கேம் சேஞ்சர் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அடிவாங்கி இருக்கின்றது. அடுத்த கட்டமாக இயக்குனர் சங்கர் இந்தியன் 3 திரைப்படத்தை இயக்க இருக்கின்றார். இப்படத்தின் பாதி படப்பிடிப்பு இந்தியன் 2 திரைப்படத்துடன் எடுத்து முடிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் 6 மாதம் இந்த திரைப்படத்தை எடுப்பதற்கு கால அவகாசம் ஆகும் என்று சமீபத்தில் பேட்டியில் கூறுகின்றார்.
மேலும் அதில் அவர் தெரிவித்திருந்ததாவது 'அடுத்த கட்டமாக இந்தியன் 3 திரைப்படத்தின் வேலைகளை தொடங்க இருக்கின்றோம். ஏற்கனவே படத்தின் பாதி காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியன் 3 படத்தின் பணிகள் அடுத்த ஆறு மாதத்தில் நிறைவடையும். படத்தில் மிகப்பெரிய விஎப்ஹெச் பணிகள் நிலுவையில் உள்ளது.
மேலும் சில காட்சிகள் படமாக வேண்டி இருப்பதால் அடுத்த கட்டமாக இந்தியன் 3 திரைப்படத்தில் முழு கவனத்தையும் செலுத்த இருப்பதாக முடிவு செய்து இருக்கின்றேன்' என்று கூறி இருக்கின்றார். ஷங்கரின் இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள் பலரும் கேம் சேஞ்சர் சோலிய மொத்தமா முடிச்சு விட்டுட்டீங்க. அடுத்த டார்கெட் இந்தியன் 3-யா என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.