ராசாத்தி உன்ன காணாத நெஞ்சி!. காந்தக் குரல் பாடகர் ஜெயச்சந்திரன் காலமானார்!....
Jayachandran: கேரளாவை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். 1967ம் வருடம் முதல் இவர் சினிமாவில் பாடி வருகிறார். எம்.எஸ்.விஸ்வநாதன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடம் இவர் பாடியிருந்தாலும் இளையராஜாவின் இசையில் இவர் பாடியது எல்லாமே சூப்பர் ஹிட் பாடல்கள்தான். 1978ம் வருடம் வெளிவந்த ஆறிலிருந்து அறுபது வரை படத்தில் கூட இவர் பாடியிருக்கிறார்.
இளையராஜா இசை: கடல் மீன்கள் படத்தி இவர் பாடிய தாலாட்டுதே வானம், அந்த 7 நாட்கள் படத்தில் பாடிய கவிதை அரங்கேறும் நேரம், சூரக்கோட்டை சிங்கக்குட்டி படத்தில் பாடிய காளிதாசன் கண்ணதாசன், பிள்ளை நிலா படத்தில் பாடிய ராஜா மகள் ரோஜா மலர், நானே ராஜா நானே மந்திரி படத்தில் பாடிய மயங்கினேன் சொல்ல தயங்கினேன் என்னை விரும்பினேன் உயிரே என எல்லா பாடல்களும் மனதை மயக்கும் சூப்பர் ஹிட் மெலடியாக அமைந்தது.
வைதேகி காத்திருந்தாள்: இந்த பாடல் எல்லாமே 70 கிட்ஸ் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டது. இப்போதும் இந்த பாடல்கள் பலரின் கார் பயணங்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜயகாந்துக்கு இவர் பாடிய ‘ராசாத்தி உன்ன காணாத நெஞ்சி’ பாடல் இப்போதும் இந்த தலைமுறை ரசிகர்களாலும் ரசிக்கப்பட்டு வருகிறது.
தேவா, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரின் இசையிலும் பல பாடல்களை ஜெயச்சந்திரன் பாடியிருக்கிறார். ரஜினிக்கு கடைசியாக பாபா படத்தில் இடம் பெற்ற பாபா பாடலையும் இவர்தான் பாடியிருந்தார். கடைசியாக 2020ம் வருடம் வன்முறை என்கிற படத்தில் இவர் பாடியிருந்தார். அதன்பின் இவர் பாடவில்லை.
புல்லை கூட பாட வைத்த புல்லாங்குழல், ஒண்ணா ரெண்டா தாமரைப்பூ, விழியே விளக்கொன்று ஏற்று, காத்திருந்து காத்திருந்து, நான் காதலில் புது பாடகன், சித்திரை நிலவு சேலையில் வந்தது, ரஹ்மான் இசையில் என் மேல் விழுந்த மழைத்துளியே உள்ளிட்ட பல பாடல்களையும் அவர் பாடியிருந்தார். இவரின் குரலுக்காகவே வைதேகி காத்திருந்தாள் படத்தின் எல்லா பாடல்களையும் இளையாராஜா இவருக்கு கொடுத்து இருந்தார். வைதேகி காத்திருந்தாளுக்கு பிறகு இந்த கூட்டணியில் தழுவாத கைகள் படத்திலும் அனைத்து பாடலையும் ஜெயச்சந்திரன் பாடி இருந்தார்.
கடந்த சில வருடங்களாகவே வயது முதிர்வு மற்றும் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில்தான் தனது 80வது வயதில் தற்போது மரணமடைந்துள்ளார். இவரின் மறைவுக்கு இசை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.