மீண்டும் முருகதாஸுடன் இணையும் எஸ்.கே?!.. இந்த டிவிஸ்ட்ட எதிர்பார்க்கலயே!..
Sivakarthikeyan: அமரன் திரைப்படத்திற்கு பின் சிவகார்த்திகேயனின் நடிப்பில் கடந்த 5ம் தேதி வெளியான திரைப்படம் மதராஸி. இந்த படத்தை ஏ.ஆர் முருகதாஸ் இயக்கியிருந்தார். கோலிவுட்டில் பெரிய இயக்குனராக பார்க்கப்படுபவர் முருகதாஸ். இதுவரை அறிமுக மற்றும் சின்ன இயக்குனர்கள் படங்களில் மட்டுமே நடித்த வந்த சிவகார்த்திகேயனுக்கு மணிரத்னம், ஷங்கர், முருகதாஸ் போன்ற பெரிய இயக்குனர்களுடன் நடிக்கும் ஆசை பல வருடங்களாக இருக்கிறது. அந்த வகையில்தான் மதராஸி படத்தில் முருகதாஸோடு கைகோர்த்தார்.
இதற்கு முன்பு வெளியான அமரன் திரைப்படம் 300 கோடி வசூலை தாண்டிய நிலையில் மதராஸி படம் அந்த அளவுக்கு வசூலை பெறுமா என்கிற சந்தேகம் பலருக்கும் இருந்தது. ஏனெனில் இந்த படத்திற்கு பெரிய அளவில் புரமோஷன் செய்யப்படவில்லை. ஒரு விதமான மனநோய் பாதிக்கப்பட்டவன் வில்லன் குரூப்பிடமிருந்து காதலியை எப்படி மீட்க போராடுகிறான் என்பதுதான் இந்த படத்தின் ஒருவரிக் கதை. துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்திருந்த வித்யூத் ஜம்வால் இந்த படத்திலும் வில்லனாக கலக்கியிருந்தார். மதராஸி படத்தில் இடம்பெற்ற அனைத்து ஆக்சன் காட்சிகளுமே ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருந்தது.
அமரன் போல ஆஹா ஓஹோ என்று இந்த படத்தை யாரும் புகழவில்லை என்றாலும் ஓரளவுக்கு வசூலை பெற்றது. படம் வெளியாகி 11 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இப்படம் 90 கோடி வரை வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 55 கோடி வசூல் செய்திருப்பதாக செய்திகள் வெளியானது. சிலர் இப்படம் 100 கோடி வசூலை தாண்டி விட்டது என்றும் சொல்கிறார்கள். படத்தின் வசூல் என்ன என்பதை தயாரிப்பாளர் இதுவரை அறிவிக்கவில்லை.
இந்நிலையில்தான் முருகதாஸுடன் சிவகார்த்திகேயன் மீண்டும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார் என்கிற செய்தி ஓடிக் கொண்டிருக்கிறது. மதராஸி படத்தின் ஷூட்டிங் நடந்த போது முருகதாஸ் சொன்ன மற்றொரு கதை சிவகார்த்திகேயனுக்கு பிடித்திருந்ததாகவும், அந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பு அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
சிவகார்த்திகேயன் இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் விரைவில் முடிவடையவுள்ளது. இந்த படத்திற்கு பின் டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். அதேபோல் வெங்கட் பிரபு படமும் பேசப்பட்டு வருகிறது. எனவே முருகதாஸ் படம் எப்போது டேக் ஆப் ஆகும் என்பது தெரியவில்லை.
