இளையராஜாவிடம் ஏற்பட்ட ஈகோ!.. வாலியை கடத்திட்டு போய் பல்பு வாங்கிய கமல்!...
80களில் இளையராஜா மிகவும் பிஸியான இசையமைப்பாளராக இருந்தார். அவரின் இசையை நம்பியே பல திரைப்படங்கள் உருவானது. எனவே, இரவு பகல் பார்க்காமல் வேலை செய்து வந்தார். அப்போது முன்னணி நடிகர்களாக இருந்த ரஜினி, கமல், மோகன் போன்ற நடிகர்களும் இளையராஜாவின் இசையை நம்பி இருந்தார்கள்.
அதாவது, இளையராஜா இசையமைத்தால் மட்டுமே நமது படங்கள் ஓடும் என்பது அவர்களுக்கு தெரிந்திருந்தது. எனவே, அவரிடம் யாரும் பிரச்சனை செய்து கொள்ள மாட்டார்கள். ஒருபக்கம், இளையராஜா இசையமைக்க சம்மதம் சொல்லிவிட்டாலே நமது படம் பாதி வெற்றி என இயக்குனர்கள் நினைத்தார்கள்.
சில இயக்குனர்கள் சங்கர் கணேஷ், எம்.எஸ்.விஸ்வநாதன் பக்கம் போனார்கள். கமலின் படங்களுக்கும் பெரும்பாலும் இளையராஜவே இசையமைத்தார். ராஜாவை பொறுத்தவரை பாடலுக்கான வரிகளை அவர்தான் இறுதி செய்வார். ஏனெனில், அவரது மெட்டுக்குள் உட்காருவது போல வரிகள் இருக்க வேண்டும் என்பதில் அவர் எப்போதும் உறுதியாக இருப்பார்.
பாடலாசிரியர்கள் என்ன வரி சொன்னாலும் மெட்டுக்கான வார்த்தைகள் வரும் வரை விட மாட்டார். இது கமலுக்கு ஈகோவை ஏற்படுத்தியது. அப்போது, அபூர்வ சகோதரர்கள் படத்தை எடுத்துக்கொண்டிருந்தார் கமல். ஒரு பாடலுக்கான மெட்டை கொடுத்திருந்தார் இளையராஜா. ‘எப்போதும் இளையராஜாதான் வரிகளை ஓகே செய்வாரா?’. இந்த முறை நான் ஓகே செய்கிறேன் என சொல்லி வாலியை அழைத்துகொண்டு 3 நாட்கள் வெளியூர் போய்விட்டார்.
திரும்பி வந்த வாலி இளையராஜாவிடம் அந்த மெட்டுக்கு 4 பல்லவிகளையும் 8 சரணங்களையும் கொடுத்துவிட்டு கமல் நினைத்ததை சொல்லிவிட்டார். ஒவ்வொன்றாக படித்து பார்த்து ரிஜெக்ட் செய்து கொண்டே வந்தார் இளையராஜா. ‘யோவ்.. நாங்க 3 நாள் கஷ்டப்பட்டு எழுதின பாட்டுய்யா’ என வாலி கோபப்பட்டார்.
இளையராஜாவோ கூலாக ‘அண்ணே என் மெட்டுக்கு உங்க வரி உட்காரவில்லை என சொல்லி வரி எப்படி வர வேண்டும் என சில வார்த்தைகளை சொன்னார்.. சாச்சா சச்சச்சச்சா.. சாச்சா சச்சச்சச்சா.. கைய வச்சா’ என டம்மி வார்த்தைகளை சொன்னார். ‘அப்ப அதையே வச்சிக்கோ ‘ராஜா கைய வச்சா’ என்றார் வாலி. ‘என் பேரை ஏன் இதுல கொண்டு வறீங்க.. தேவையா?’ என ராஜா கேட்க வாலியோ ‘யோவ் இருக்கட்டும்யா ஏற்கனவே நீ பிரபலமானவன். சரியாக இருக்கும்’ என சொல்லியிருக்கிறார். அப்படி உருவான பாடல்தான் ‘ராஜா கைய வச்சா. அது ராங்கா போனதில்லே’.
அதன்பின் பாட்டை கேட்டுவிட்டு கமல் இளையராஜாவிடம் ‘நீங்கள் பாடல் வரிகளை ஓகே செய்வதுதான் சரி’ என சரணடைந்துவிட்டாராம். இந்த தகவலை இளையராஜா சமீபத்தில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சியில் சொல்லி இருக்கிறார்.