கருப்புக்கு வந்த கண்டம்.. விஜயோடு மோதப் போகும் சூர்யா?.. கலெக்ஷன் வருமா?..
Karuppu: நடிகர் சூர்யாவுக்கு சிங்கம் 2 விற்கு பின் ஒரு சூப்பர் ஹிட் படம் அமையவில்லை. அவரின் சூரரைப் போற்று, ஜெய்பீம் ஆகிய இரண்டு படங்களும் ஹிட் படங்கள்தான் என்றாலும் அவை தியேட்டரில் வெளியாகவில்லை. மாறாக ஓடிடியில் வெளியானது. எனவே தியேட்டரில் மட்டுமே படம் பார்க்கும் ரசிகர்கள் பலரும் அந்த படத்தை பார்க்கவில்லை.
சூர்யாவும் பல கதைகளை நிராகரித்து சில கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தாலும் படங்கள் ஓடுவதில்லை. சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்கிற படத்தில் நடித்தார். இந்த படத்தில் சூர்யாவுக்கு வித்தியாசமான கதாபாத்திரம். ஹாலிவுட் ஸ்டைலில் இந்த படம் உருவாக்கப்பட்டது. ஆனால் எதிர்மறை விமர்சனங்களால் இப்படம் படுதோல்வி அடைந்தது.
அடுத்து கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து ரெட்ரோ படம் வெளியானது. இந்த படம் அதிக அளவில் நெகட்டிவ் விமர்சனங்களை பெறவில்லை என்றாலும் பெரிய வசூலை பெறவில்லை.
ரெட்ரோ படத்திற்கு பின் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்கிற படத்தில் நடித்தார் சூர்யா. இந்த படத்தில் வழக்கறிஞர் மற்றும் கருப்பண்ண சாமி என இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார் .
மேலும் திரிஷா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் டீசர் வீடியோவும் வெளியானது. டீசரை பார்க்கும்போது கண்டிப்பாக இப்படம் சூர்யாக்கு ஒரு ஹிட் படமாக அமையும் என்று கணிக்கப்படுகிறது. இந்தப் படத்தை இந்த வருட தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் இப்படத்தின் ஓடிடி உரிமை இன்னமும் விற்கப்படவில்லை. இப்போதெல்லாம் எவ்வளவு பெரிய நடிகர் என்றாலும் அப்படத்தின் ரிலீஸ் தேதியை ஓடிடி நிறுவனங்கள்தான் முடிவு செய்கின்றன.
அமேசான், நெட்ஃப்லிக்ஸ் போன்ற ஓடிடி நிறுவனங்கள் இந்த வருடத்திற்கான படங்களை புக் செய்து விட்டதால் கருப்பு படத்தை அடுத்த வருடம்தான் வாங்க முடியும் என சொல்லிவிட்டதாக செய்திகள் வெளியானது. எனவே கருப்பு திரைப்படம் 2026 பொங்கலுக்கு வெளியாக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஜனநாயகன், பராசக்தி உள்ளிட்ட அரை டஜன் படங்கள் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
அதில் சில படங்கள் ஜனவரி 9ம் தேதியும் சில படங்கள் 14ம் தேதியும் வெளியாகவுள்ளது. இதில் ஜனநாயகன் 14ஆம் தேதியும் சிவகார்த்திகேயனின் பராசக்தி 9ம் தேதியும் வெளியாக உள்ளது. எனவே கருப்பு படத்தை பராசக்தி படத்தோடு வெளியிடலாம் எனவும் யோசித்து வருகிறார்களாம். 5 நாட்களில் ஓரளவுக்கு வசூலை எடுத்து விட்டால் அதன்பின் வெளியாகும் ஜனநாயகன் படத்தால் கருப்பு படத்திற்கு பாதிப்பு இருக்காது என நினைக்கிறார்கள். ஒருவேளை ஜனநாயகன் படம் ஜனவரி 9ம் தேதி வெளியானால் பராசக்தி, கருப்பு ஆகிய படங்கள் 14ம் தேதி வெளியாகலாம் என சொல்லப்படுகிறது. ஆனால் இதுவும் ஓடிடி நிறுவனத்தில் கையில்தான் இருக்கிறது.
சிலரோ கருப்பு படம் பொங்கலுக்கும் வர வாய்ப்பில்லை. அனேகமாக 2026 பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் தள்ளிப்போகும் என சொல்கிறார்கள். கருப்பு என்னவாக போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
