விடாமுயற்சிக்கு 9 மணி ஷோ இருக்கா? இல்லையா?.. தமிழக அரசு வெளியிட்ட அரசாணை!..
Actor Ajith: பல்வேறு தடைகளை தாண்டி அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் விடாமுயற்சி திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. அஜித் நடிப்பில் கடைசியாக 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு துணிவு திரைப்படம் வெளியானது. அதனை தொடர்ந்து அவரின் எந்த திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகாத காரணத்தால் விடாமுயற்சி திரைப்படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
விடாமுயற்சி ரிலீஸ்: கடந்த 2 வருடங்களாக மகிழ் திருமேனி இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வந்த திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தில் நடிகர் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருக்கின்றார்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று கூறப்பட்டு வந்தார்கள். ஆனால் திடீரென்று பொங்கல் ரேசிலிருந்து விடாமுயற்சி திரைப்படம் விலகியது. இதனை தொடர்ந்து தற்போது பிப்ரவரி 6ம் தேதி இப்படம் வெளியாகின்றது.
ப்ரீ புக்கிங்: நாளை இந்த திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக இருப்பதால் இன்று முதலே அஜித் ரசிகர்கள் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்ப்பதற்கு புக்கிங் செய்து வருகிறார்கள். அந்த வகையில் மற்ற மாநிலங்களில் காலை 4 மணி அல்லது 6 மணி முதல் ஸ்பெஷல் காட்சி தொடங்கும். ஆனால் தமிழகத்தை பொறுத்தவரையில் ஸ்பெஷல் காட்சி என்பது கிடையாது. பொதுவாக தமிழகத்தில் முதல் நாள் முதல் காட்சி என்பது 11:30 தொடங்கும்.
ஆனால் பெரிய பெரிய நடிகர்கள் அதாவது விஜய் ,அஜித், கமல்ஹாசன், ரஜினி ,தனுஷ் என தமிழ் சினிமாவில் டாப் நடிகர்கள் படங்களுக்கு 9 மணி ஸ்பெஷல் காட்சிக்கு அனுமதி வழங்கப்படும். அந்த வகையில் நடிகர் அஜித்தின் திரைப்படத்திற்கு 9:00 மணி ஸ்பெஷல் காட்சி கிடையாது என்று காலை முதலே தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தது
தமிழக அரசு அரசாணை: இந்நிலையில் தற்போது தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டு இருக்கின்றது. 'அதில் 6-ம் தேதி வெளியாகும் விடாமுயற்சி திரைப்படத்தை பிப்ரவரி 6ம் தேதி மற்றும் பிப்ரவரி 7ஆம் தேதி ஆகிய இரண்டு தினங்களுக்கு மட்டும் கூடுதலாக ஒரு சிறப்பு காட்சியினை காலை 9 மணிக்கு திரையிட அனுமதி அளிக்கும்படி லைக்கா நிறுவனம் அரசிடம் கோரிக்கை வைத்திருந்தது.
இந்த கோரிக்கையை ஏற்று 2 நாட்களுக்கு மட்டும் காலை 9 மணி சிறப்பு காட்சி திரையிட அனுமதி வழங்கப்படுகின்றது. அதன்படி பிப்ரவரி 6ம் தேதி மற்றும் 7ம் தேதி இரண்டு தினங்கள் மட்டும் காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை ஒரு நாளைக்கு ஐந்து காட்சிகள் திரையரங்குகளில் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது' என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த செய்தி அஜித் ரசிகர்களிடையே மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.