அந்த பொண்ணு செத்துருச்சா!. அப்ப படம் ஹிட்டு!.. அப்படி சொன்னாரா அல்லு அர்ஜூன்?!...
Allu arjun: தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் புஷ்பா 2 படம் வெளியானபோது சிறப்பு காட்சியை பார்ப்பதற்காக ஹைதராபாத்தில் உள்ள தியேட்டருக்கு போன போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு ரேவதி என்கிற பெண் உயிரிழந்தார். அவரின் மகன் தற்போது மருத்துவமனையில் கோமாவில் இருக்கிறார். இது தொடர்பாக அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு ஒரு இரவு சிறையில் இருந்துவிட்டு அடுத்தநாள் காலை பெயில் வாங்கி வெளியே வந்தார். இதையடுத்து, சிரஞ்சீவி உள்ளிட்ட பல நடிகர்கள் அவரை நேரில் சந்தித்து தங்களின் ஆதரவை தெரிவித்தார்கள்.
ஒருபக்கம் அல்லு அர்ஜூனை கைது செய்திருக்க வேண்டிய அவசியமில்லை. இதற்கு பின்னால் இருப்பது அரசியல் என பலரும் பேசினார்கள். இது தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு கோபத்தை ஏற்படுத்தியது. நேற்று சட்டசபையில் பேசிய அவர் அல்லு அர்ஜூனா கைது பற்றி காட்டமாக பேசினார்.
தியேட்டருக்கு வந்தால் சமாளிக்க முடியாது என போலீசார் சொல்லியும் அல்லு அர்ஜூன் படம் பார்க்க வந்தார். பெண் உயிரிழந்த பிறகும் தியேட்டரில் இருந்து அவர் செல்லவில்லை. 'நீங்கள் செல்லவில்லை எனில் உங்களை கைது செய்வோம்' என போலீசார் எச்சரித்த பின்னரே அவர் வெளியேறினார். அப்படி போகும்போது காரிலிருந்து கை காட்டி ரோட் ஷோ காட்டிக்கொண்டே போனார். இவர்கள் எல்லாம் என்ன மாதிரியான மனிதர்கள்?’ என அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும் ‘அவர் எதை இழந்தார் என சினிமா பிரபலங்கள் அவருக்கு நேரில் போய் ஆறுதல் சொன்னார்கள். கண், கால், கிட்னி எதையாவது இழந்தாரா?.. அல்லு அர்ஜுனை பார்க்க போன நடிகர்கள் ஒரு பெண் இறந்துபோனது பற்றியோ, கோமாவில் இருக்கும் சிறுவன் பற்றியோ கவலைப்பட்டார்களா?.. திரையுலகினர் இந்த சமூகத்திற்கு என்ன செய்தியை தருகிறார்கள். நான் இருக்கும் வரை தெலுங்கானாவில் சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை’ என அவர் பேசினார்.
இந்நிலையில், அதே சட்டசபையில் பேசிய தெலுங்கான எம்.எல்.ஏ அக்பருதீன் ஓவைசி ‘நெரிசலில் சிக்கி ஒரு பெண் இறந்துவிட்டார், இரண்டு குழந்தைகள் காயமடைந்துவிட்டனர் என அவரிடம் சொன்னபோது சிரித்துக்கொண்டே ‘இந்த படம் நிச்சயம் ஹிட் ஆகிவிடும்’ என சொன்னதாக கேள்விப்பட்டேன். ஆனால், எல்லோரும் அரசை குறை சொல்கிறார்கள். அந்த நேரத்தில் அந்த நடிகருக்கு கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லையா?’ என கேள்வி கேட்டார்.
இதுபற்றி செய்தியாளர்களிடம் விளக்கமளித்த அல்லு அர்ஜூன் ‘தியேட்டரில் நான் ரோட் ஷோ செய்ததாக சொல்கிறார்கள். சில மீட்டர் தூரம் மட்டுமே அதை செய்தேன். ரசிகர்களை அமைதிப்படுத்தவதற்காக அப்படி செய்தேன். மேலும், தங்களின் அபிமான நாயகனை பார்க்க வரும் ரசிகர்களை நோக்கி கையை கூட அசைக்காமல் காரின் உள்ளே அமர்ந்து செல்வது மரியாதையாக இருக்குமா?’ என கேள்வி எழுப்பியிருக்கிறார். மொத்தத்தில் அல்லு அர்ஜூன் விவகாரம் தெலுங்கானாவிலும், சினிமா உலகிலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.