இதனால்தான் இளையராஜாவை உள்ளே விடவில்லை!.. கோவில் நிர்வாகம் விளக்கம்!..
Ilayaraja: இசையுலகில் உச்சத்தில் இருப்பவர் இளையராஜா. அன்னக்கிளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைக்க துவங்கிய இவரின் பாடல் பட்டி தொட்டியெங்கும் பாடியது. 80களில் இவரின் இசையை நம்பியே பல திரைப்படங்கள் உருவானது. படங்களின் வெற்றிக்கு இளையராஜாவின் இசை தேவையாக இருந்தது.
ரஜினி, கமல், மோகன், விஜயகாந்த், ராமராஜன் போன்ற பெரிய நடிகர்களே தங்களின் படங்களின் வெற்றிக்கு இளையராஜா தேவை என நினைத்தார்கள். பாடல்கள் மட்டுமில்லாமல் பின்னணி இசையிலும் அசத்தினார் இளையராஜா. இயக்குனர் சொல்ல வருவதை பின்னணி இசை மூலம் கடத்திவிடுவதில் வல்லவர் அவர்.
அதனால்தான் அவரின் இசைக்கு கோடிக்கணக்கான ரசிகர்கர் இருக்கிறார்கள். 70,80களில் பிறந்தவர்கள் பெரும்பாலும் இளையராஜாவின் ரசிகர்களாகவே இருப்பார்கள். இப்போதும் தனது பாடல்கள் மூலம் பலரின் மனக்காயங்களுக்கு மருந்து போட்டு வருகிறார் இளையராஜா. அதேசமயம் அடிக்கடி அவர் சர்ச்சையிலும் சிக்குவதுண்டு.
செய்தியாளர்கள் ஏதேனும் ஏடாகூடமாக கேள்வி கேட்டால் நுனி மூக்கில் கோபம் வரும் அவருக்கு. பலமுறை அந்த கோபத்தை காட்டியிருக்கிறார். வியாபார நோக்கத்தோடு தனது பாடலை யாரும் பயன்படுத்தக்கூடாது என நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தவர் இவர். இதில் அவரை பலரும் விமர்சித்தார்கள்.
இன்று காலை இளையராஜா ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி காத்திருந்தது. இளையராஜா ஒரு தீவிர ஆன்மிகவாதி. தமிழகத்தில் உள்ள பல கோவில்களுக்கும் அவர் அடிக்கடி செல்வதுண்டு. விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு இளையராஜா சென்றிருக்கிறார்.
இதைத்தொடர்ந்து கருவறைக்குள் இளையராஜாவை அனுமதிக்க மாட்டோம் என சொல்லி அங்கிருந்த ஐயர்களும், ஜீயர்களும் அவரை தடுத்து நிறுத்தி வெளியே அழைத்து வந்ததாக வீடியோவே வெளியானது. இது இளையராஜா ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. எனவே, கோவில் நிர்வாகத்தை விமர்சித்து சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், இதுபற்றி விளக்கமளித்துள்ள கோவில் நிர்வாகம் ‘ஜீயர்கள் தவிர வேறு யாருக்கும் அர்த்தமண்டபத்தில் அனுமதி இல்லை. ஏனெனில், அர்த்த மண்டபத்தில் உற்சவர் சிலைகள் நிரந்தரமாக இருப்பதால் யாருக்கும் அங்கே அனுமதி கிடையாது’ என சொல்லப்பட்டிருக்கிறது.