ரிலீசுக்கு முன்பே கோடிகளை அள்ளிய தக் லைஃப்!.. கமல் காட்டுல வசூல் மழைதான்!...

by MURUGAN |   ( Updated:2025-05-14 06:50:41  )
thug life
X

சினிமாவில் சில காம்பினேஷன் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அதில் ஒன்றுதான் மணிரத்னம் - கமல் கூட்டணி. இருவரும் சேர்ந்து நாயகன் படத்தை உருவாக்கினார்கள். 1987ம் வருடம் இப்படம் வெளியானது. தமிழில் அதுவரை அப்படி ஒரு படத்தை ரசிகர்கள் பார்த்தது இல்லை. ஆங்கில படம் போல மேக்கிங்கில் கலக்கி இருந்தார் மணிரத்னம்.

இளையராஜாவின் இசையிலும், பிசி ஸ்ரீராமின் ஒளிப்பதிவிலும் நாயகன் படம் ரசிகர்களுக்கு ஒரு புதிய உணர்வை கொடுத்தது. இந்த படத்திற்கு மணிரத்னம் அமைத்திருந்த திரைக்கதை பலரையும் சினிமாவை நோக்கி இழுத்தது. புதிய சினிமாவை விரும்பிய ரசிகர்களுக்கு இப்படம் ஒரு முக்கிய படமாக அமைந்தது.

ஆனால், துரதிஷ்டவசமாக அந்த படத்திற்கு பின் கமலும், மணிரத்னமும் இணையவே இல்லை. அவர்கள் அடிக்கடி சந்தித்து பேசிக்கொண்டாலும் இருவரும் இணையும் வாய்ப்பு அமையவே இல்லை. இந்நிலையில்தான் தக் லைஃப் படம் மூலம் இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். இந்த படத்தில் சிம்புவும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.


அதோடு திரிஷா, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் வருகிற ஜூன் 5ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படம் தொடர்பான புரமோஷன் நிகழ்ச்சிகளில் கமலும், சிம்புவும் தொடர்ந்து கலந்துகொண்டு வருகிறார்கள். இந்த படத்தை கமலும், மணிரத்னமும் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்நிலையில், தக் லைஃப் படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் 150 கோடிக்கு வாங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல், சேட்டிலைட் உரிமையை விஜய் டிவி 60 கோடிக்கு வாங்கி இருக்கிறது என்கிறார்கள். எனவே, ரிலீஸுக்கு முன்பு தக் லைஃப் படம் 210 கோடியை வசூல் செய்திருக்கிறது.

விக்ரமுக்கு பின் கமலுக்கு தக் லைஃப் வெளியாகவுள்ளது. மேலும், சிம்புவின் பத்து தல படம் வெளியாகி 2 வருடங்கள் ஆகிவிட்டது. எனவே, இந்த படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இந்த வாரம் சென்னையில் நடக்கவிருந்தது. ஆனால், இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் எழுந்த நிலையில் இந்த விழா தள்ளி போடப்பட்டிருக்கிறது.

Next Story