காதலியை சர்ப்ரைஸ் செய்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குனர்! திருமணத்தில் இணைந்த தம்பதி
கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி பெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம். சசிகுமார், சிம்ரன் ஆகியோர் நடிப்பில் எதார்த்தமான வாழ்வியலை அடிப்படையாக கொண்டு அந்தப் படத்தை எடுத்தார் படத்தின் இயக்குனர் அபிஷன். படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. சின்ன பட்ஜெட் படம் என்றாலும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தது.
இதுதான் அபிஷனுக்கு முதல் திரைப்படம். அந்தப் படத்தின் வெற்றிவிழாவில் மேடையில் பேசும் போது இயக்குனர் அபிஷன் அவருடைய ஆசையை கூறியிருந்தார். அதாவது நான் இந்த நிலைமைக்கு இன்று வருவதற்கு பல பேர் காரணமாக இருக்கலாம். அதையெல்லாம் தாண்டி இன்னொருவருக்கும் முக்கிய பங்கு இருக்கிறது என்று கூறியிருந்தார்.
அவர் வேறு யாருமில்லை. இன்று அவர் கரம்பிடித்த காதல் மனைவியான அகிலா இளங்கோவன். டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் வெற்றிவிழாவில்தான் அபிஷன் தன்னுடைய காதலை முதன் முதலாக தெரிவித்தார். அகிலா இளங்கோவனும் அபிஷனும் ஆறாம் வகுப்பு படிக்கும் போதே நண்பர்களாக இருந்திருக்கிறார்கள். அதன் பிறகு 10 ஆம் வகுப்பில்தான் மிகவும் க்ளோஸாக பழக ஆரம்பித்திருக்கிறார்கள்.

இதை அபிஷன் மேடையில் பேசிவிட்டு ‘வரும் அக்டோபர் 31 ஆம் தேதி என்னை கல்யாணம் பண்ணிக்கிறீயா’ என்று திடீரென அந்த கேள்வியை அவர் தோழியிடம் கேட்டிருந்தார். இதை கேட்டதும் அவரது தோழி அகிலா ஆனந்தத்தில் அழுதுவிட்டார். எல்லா நேரங்களிலும் துவண்டு போகும் போதும் அவரது தோழி அகிலாதான் உடன் இருந்திருக்கிறாராம். அப்படிப்பட்ட தன்னுடைய தோழியை இன்று திருமணம் செய்திருக்கிறார் அபிஷன்.
அன்று மேடையில் சொன்ன அதே தேதியில்தான் அவரது திருமணம் நடந்திருக்கிறது. இவரது திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களது திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றது. சமீபத்தில்தான் டூரிஸ்ட் ஃபேமிலி பட தயாரிப்பாளர் மகேஷ் அபிஷனுக்கு அவருடைய திருமண அன்பளிப்பாக பிஎம்டபுள்யூ காரை பரிசாக கொடுத்தார்.
