மதகஜராஜா ஹிட்.. பல வருடங்களாக தூங்கும் படங்களெல்லாம் ரிலீஸ்!..

Madhagajaraja: ஒரு திரைப்படம் உருவாவது எவ்வளவு முக்கியமோ அதை விட முக்கியம் அந்த படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆக வேண்டும். சினிமாவில் எந்த தயாரிப்பாளர்களும் சொந்த பணத்தை போட்டு படமெடுக்கமாட்டார்கள். பைனான்சியர்களிடம் பணம் வாங்கியே படமெடுப்பார்கள். ஏனெனில் படம் தோல்வி அடைந்து நஷ்டம் எனில் வினியோகஸ்தர்களுக்கு பணத்தை திருப்பி தர வேண்டியிருக்கும்.
அப்படி நடந்தால் ‘அடுத்த படத்தில் சரி செய்துவிடுகிறோம்’ என சொல்வார்கள். இதுதான் சினிமாவில் காலம் காலமாக உள்ள வியாபார நடைமுறை. தயாரிப்பாளர் ஒரு படத்தை உருவாக்கி வினியோகஸ்தர்களிடம் ஒரு விலை பேசி கொடுப்பார். வினியோகஸ்தர்கள் தமிழகமெங்கும் உள்ள தியேட்டர்களில் அப்படத்தை ரிலீஸ் செய்வார்கள். படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றால் லாபத்தை எல்லோரும் பங்கிட்டு கொள்வார்கள். இதுதான் சினிமா வியாபாரம்.
அதேபோல், படத்தை உருவாக்கும்போது வாங்கிய பணத்தை பட ரிலீஸுக்கு முன்பே ஃபைனான்சியருக்கு தயாரிப்பாளருக்கு கொடுத்துவிட வேண்டும். இல்லையேல் படத்தை ரிலீஸ் செய்ய விடமாட்டார்கள். இப்படித்தான் பல வருடங்களாக பல படங்கள் ரிலீஸே ஆகாமல் பொட்டியில் தூங்குகிறது.
மதகஜராஜா: அப்படி கிடந்த மதகஜராஜா திரைப்படம் எப்படியோ பேசி தீர்க்கப்பட்டு கடந்த 12ம் தேதி தியேட்டர்களில் வெளியானது. நல்லவேளையாக இப்படம் நல்ல லாபத்தை கொடுத்திருக்கிறது. 10 கோடிக்குள் உருவான இப்படம் எப்படியும் 50 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தின் வெற்றி திரையுலகினருக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. எனவே, கிடப்பில் கிடக்கும் பல படங்களை ஒவ்வொன்றாக ரிலீஸ் செய்யும் முயற்சியில் தயாரிப்பாளர் சங்கம், வினியோகஸ்தர்கள் சங்கம் மற்றும் தியேட்டர் அதிபர்கள் சங்கம் ஆகியவை இறங்கியுள்ளது. இதை வினியோகஸ்தர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் உறுதி செய்துள்ளார்.
துருவ நட்சத்திரம்: ஊடகம் ஒன்றில் பேசிய அவர் ‘துருவ நட்சத்திரம், சர்வர் சுந்தரம், இடம் பொருள் ஏவல் உள்ளிட்ட பல படங்களை ரிலீஸ் செய்யும் முயற்சில் ஈடுபட்டுள்ளோம். வருகிற 26ம் தேதி முதல் துருவ நட்சத்திரத்தை ரிலீஸ் செய்யும் வேலைகளை துவங்கவிருக்கிறோம். பல வருடங்களுக்கு வட்டியை தயாரிப்பாளர்களால் கொடுக்க முடியாது என்பதை ஃபைனான்சியர்களும் உணர்ந்திருக்கிறார்கள். எனவே, மிகவும் குறைவான வட்டியோடு அசலை கொடுத்தால் போதும் என சொல்லியிருக்கிறார்கள். சிலர் வட்டியே வேண்டாம். அசலை திருப்பி கொடுத்தால் போதும் என சொல்வார்கள். நல்லது நடக்கும்’ என சொல்லியிருக்கிறார்.