மஞ்சள் வீரன் படத்திலிருந்து டிடிஎப் வாசன் நீக்கம்!.. இது என்னடா சூப்பர்ஸ்டாருக்கு வந்த சோதனை!...
யுடியூப்பில் பைக்கை வேகமாக ஓட்டி இளசுகளிடம் பிரபலமானவர்தான் இந்த டிடிஎப் வாசன். பைபாஸ் சாலைகளில் தனது ஹெல்மெட்டில் கேமராவை வைத்து அளவுக்கு மீறிய வேகத்தில் பைக்கை ஓட்டி அதை பதிவு செய்து அதை வீடியோவாக வெளியிட்டு வந்தார்.
இவருக்கென ரசிகர் கூட்டமும் உண்டு. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இவர் மீது காவல் நிலையத்தில் புகார்களும் கொடுக்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு அப்படி பைக் ஓட்டும்போது கட்டுப்பாட்டை மீறி சாலை ஓரத்தில் விழுந்தார் டிடிஎப் வாசன். இந்த வீடியோவை வெளியிட்டு பலரும் அவரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
எனவே, தமிழக போக்குவரத்து துறை சார்பில் டிடிஎப் வாசன் கைது செய்யப்பட்டார். அவரின் ஓட்டுனர் உரிமமும் பறிக்கப்பட்டது. அதன்பின் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் காரை ஓட்டியதாகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இப்படி தொடர்ந்து வழக்குகளில் சிக்கி வந்தார் வாசன்.
சர்ச்சைகளில் சிக்குபவர்களையும், ரசிகர் கூட்டம் வைத்திருப்பவர்களையும் சினிமா எப்போதும் பயன்படுத்திகொள்ளும். அந்த வகையில் டிடிஎப் வாசனை ஹீரோவாக போட்டு மஞ்சள் வீரன் என்கிற படம் துவங்கப்பட்டது. இந்த படத்தை செல்அம் என்பவர் இயக்கி வந்தார். சில நாட்கள் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார் வாசன்.
இந்த படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்புகளில் ‘டிடிஎப் வாசன்தான் அடுத்த சூப்பர்ஸ்டார்’ என்றெல்லாம் பில்டப் கொடுத்து வந்தார் இயக்குனர் செல்அம். இந்நிலையில், மஞ்சள் வீரன் படத்திலிருந்து டிடிஎப் வாசன் தூக்கப்பட்டிருக்கிறார். இது வாசனின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
இதுபற்றி விளக்கமளித்துள்ள செல்அம் ‘டிடிஎப் வாசனோடு பயணிக்க வேண்டுமென்றுதான் ஆசைப்பட்டேன். ஆனால், சூழ்நிலை ஒத்துவரவில்லை. அவரால் சரியாக படப்பிடிப்பில் கலந்து கொள்ளமுடியவில்லை. எனவே, அவருக்கு பதில் ஒரு புதிய கதாநாயகனை அறிமுகம் செய்யவிருக்கிறேன். இதற்கான அறிவிப்பு அக்டோபர் 15ம் தேதி வெளியாகும். டிடிஎப் வாசன் இந்த படத்தில் இல்லை என்றாலும் அவருடனான நட்பு தொடரும் என செல்அம் கூறியிருக்கிறார்.