பொங்கிய விஜய்!... கூலாக பதில் சொன்ன உதயநிதி!.. இது எங்க போய் முடியுமோ?!...
Actor Vijay: தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி அரசியலில் இறங்கியிருக்கிறார் விஜய். சினிமாவில் முன்னணி நடிகர் என்றாலும் அவருக்கு 200 கோடிக்கும் மேல் சம்பளம் கொடுக்க தயாரிப்பாளர்கள் இருந்தும் சினிமா வேண்டாம் என சொல்லிவிட்டு அரசியலுக்கு போயிருக்கிறார்.
விஜய் கடந்த சில வருடங்களாகவே தனது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளிடம் பேசி அரசியலில் இறங்குவது பற்றி ஆலோசித்து வந்தார். நான் அரசியலுக்கு வருவது உறுதி என சொன்ன ரஜினி தனது உடல்நிலையை காரணம் காட்டி எஸ்கேப் ஆகிவிட்ட நிலையில் விஜய் கட்சியை ஆரம்பித்து கொடியை அறிமுகம் செய்து விழுப்புரம் விக்கிரவாண்டியில் மாநாட்டையும் நடத்தி முடித்துவிட்டார் விஜய்.
விஜய் நடத்திய தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் 8 லட்சம் பேர் கலந்து கொண்டதாக சொல்லப்பட்டது. தமிழகம் மட்டுமில்லாமல் கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் விஜய் ரசிகர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் விஜய் மிகவும் ஆக்ரோஷமாக பேசினார்.
குறிப்பாக ஆளும் கட்சியை கடுமையாக விமர்சித்து பேசினார். அவர்கள் ‘ஃபாசிசம் என்றால் நீங்கள் என்ன பாயாசமா?’ எனக்கேட்டார். மேலும், சமூகநீதி என சொல்லி ஊழலை செய்து மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள் என பேசினார். இதற்கு திமுகவை சேர்ந்த சில அமைச்சர்கள் மட்டும் பதிலடி கொடுத்தனர்.
இப்போது கட்சி துவங்கியவர்கள் கூட திமுக அழிய வேண்டும் என நினைக்கிறார்கள் என முதல்வர் பேசினார். ஆனால், அப்போது உதயநிதி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. நேற்று அம்பேத்கர் நூலை வெளியிடும் விழாவில் கலந்து கொண்ட விஜய் மீண்டும் திமுகவை சீண்டினார்.
சுயநலத்துடன் கூட்டணி கணக்கு போட்டு நீங்கள் நடத்தி வரும் அரசியலுக்கு 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள் என பேசினார். இந்நிலையில், விஜய் பேசியது பற்றி துணை முதல்வர் உதயநிதியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு ‘நான் சினிமா செய்திகளை பார்ப்பதில்லை’ என நக்கலாக பதில் சொல்லியிருக்கிறார்.