போஸ்டர் ரிலீஸானாலும் படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல்!.. பொங்கலுக்கு வருமா வணங்கான்?!..
Vanangaan: சேது திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பாலா. இவர் பாலுமகேந்திராவின் உதவியாளர். முதல் படத்திலேயே அதிர வைத்தார். இவருக்கென ரசிகர்கள் உண்டானார்கள். அடுத்து நந்தா படம் வெளியான போது பாலாவுக்காகவே பலரும் சென்று படம் பார்த்தார்கள். அந்த அளவுக்கு ரசிகர்களை உருவாக்கி வைத்திருந்தார்.
நந்தா, பிதாமகன் ஆகிய திரைப்படங்கள் மூலம் சூர்யாவை ஒரு முழு நடிகராக மாற்றியவர் பாலாதான். ஆர்யாவை வைத்து நானும் கடவுள் படத்தை இயக்கி சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை பெற்றார். இந்த படம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன்பின் பாலாவுக்கு பேசும்படியான திரைப்படங்கள் அமையவில்லை.
அவன் இவன், நாச்சியார் என சில படங்களை இயக்கினார். சூர்யாவை வைத்து வணங்கான் படத்தை துவங்கினார். ஆனால், சில நாட்கள் நடித்துவிட்டு அந்த படத்திலிருந்து சூர்யா வெளியேறி விட அவருக்கு பதில் அருண் விஜய் நடித்து படம் உருவானது. சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
இந்த விழாவில் சூர்யா, சிவக்குமார், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு படத்திற்கும், பாலாவுக்கும் வாழ்த்து சொன்னார்கள். வணங்கான் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால், வணங்கான் படம் பொங்கல் ரேஸில் இருந்து விலகுவதாக கடந்த 2 நாட்களாக செய்திகள் வெளியாகி வந்தது.
ஆனால், வருகிற ஜனவரி 10ம் தேதி வணங்கான் ரிலீஸ் என போஸ்டர் வெளியானதும் வணங்கான் பொங்கலுக்கு வருகிறது என எல்லா ஊடகங்களும் செய்தி வெளியிட்டது. ஆனால், அதில் சில சிக்கல்கள் இருப்பது தெரியவந்திருக்கிறது. தமிழகத்தில் தியேட்டரில் வெளியிடும் உரிமைக்கு தயாரிப்பாளர் அதிக விலை சொல்வதால் இப்படத்தை வாங்க வினியோகஸ்தர்கள் முன்வரவில்லையாம்.
டிஸ்ட்ரிபியூசன் அல்லது மினிமம் கேரண்டி அடிப்படையில் வாங்குவது தொடர்பான பேச்சுவார்த்தையிலும் இழுபறி நீடித்து வருவதாக சொல்லப்படுகிறது. ஆனாலும், பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்பட்டு படம் வெளியாகும் என்கிற நம்பிக்கையில்தான் 10ம் தேதி ரிலீஸ் என போஸ்டரை வெளியிட்டிருக்கிறது தயாரிப்பாளர் தரப்பு என்கிறார்கள்.