யுவனின் 50-வது படம் என்னனு யாருக்குமே தெரியல.. ரகசியத்தை உடைத்த வெங்கட் பிரபு..
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவர் வெங்கட் பிரபு. பிரபல இசையமைப்பாளர், பாடல் ஆசிரியர், எழுத்தாளர் கங்கை அமரன் மகன் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக இவரது பயணத்தை தொடங்கினார். சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த வெங்கட் பிரபுவிற்கு நடிப்பு எந்த விதத்திலும் கை கொடுக்கவில்லை. அதனால் தனது பாதையை மாற்ற நினைத்த வெங்கட் பிரபு இயக்குனர் அவதாரம் எடுத்தார்.
சென்னை 600028 என்ற படத்தின் மூலம் தொடங்கியவர் முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை பெற்றார். அந்த காலகட்டத்தில் அதுவரை வந்து கொண்டிருந்த படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதை களத்தில் புது முகங்களை வைத்து காமெடி கலந்து சென்னை 600028 திரைப்படத்தை எடுத்திருப்பார்.
அது மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றதை அடுத்து ’சரோஜா’ திரைப்படம் மூலம் ஒரு இயக்குனராக தமிழ் சினிமாவில் கவனிக்கப்பட்டார். இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் இவருக்கு வெற்றிகளை கொடுத்தது. அடுத்த இவர் இயக்கிய ’கோவா’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று இவருக்கு ’மங்காத்தா’ வாய்ப்பை பெற்றுக் கொடுத்தது.
அந்த படம் மாபெரும் ஹிட் அடித்து. அதன் பிறகு ’பிரியாணி’ படம் ஓரளவுக்கு வெற்றி பெற்றாலும் அடுத்ததாக சூர்யாவை வைத்து இவர் இயக்கிய ’மாஸ்’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. அதன் பிறகு இயக்கிய ’மாநாடு’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று சிம்புவிற்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது. கடைசியாக இவர் இயற்றிய ’கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படம் 400 கோடி வசூலித்தது.
வெங்கட் பிரபு இயக்கும் எல்லா படங்களுக்கும் தொடர்ந்து இசையமைத்துக் கொண்டு வருபவர் யுவன் சங்கர் ராஜா. தனது சகோதரர் என்பதால் முதல் படம் தொடங்கி கோட் படம் வரை இவர் மட்டும்தான் இசையமைப்பாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் வெங்கட் பிரபு, தனக்கும் தனது தம்பி யுவன் சங்கர் ராஜாவிற்கும் இடையே நடந்த எதிர்பாராத சம்பவத்தை பகிர்ந்துள்ளார் அதில்
“யுவனின் நூறாவது படம் பிரியாணி என்பது அனைவருக்கும் தெரியும். அதன் இயக்குனர் நான்தான் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் யுவனின் 50வது படம் யாருக்காவது தெரியுமா?, என்றால் அப்படி நினைவு வைத்துக் கொள்ளும் அளவிற்கு யாருக்கும் தெரியாது. அது ”சென்னை 600028” தான். அது யுவனுக்கே தெரியாது. அந்த சமயத்துல எங்களுக்கு அது தெரிந்தது என்றால் அதை பெரிதளவில் பப்ளிசிட்டி பண்ணியிருப்போம். அது ரொம்ப லேட்டா தான் எங்களுக்கே தெரிஞ்சது. யுவனின் ஐம்பதாவது மற்றும் நூறாவது படங்களுக்கு நான் இயக்குனர் என்பதில் பெருமை கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
