சூரியோட நிலமைதான் சிம்புவுக்கும்!. எப்படியும் 4 வருஷமாயிடும்!..
STR49: தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய அளவிலும் முக்கிய இயக்குனராக பார்க்கப்படுபவர் வெற்றிமாறன். இவர் இயக்கிய ஆடுகளம், அசுரன் ஆகிய திரைப்படங்கள் அவருக்கும் தனுசுக்கும் தேசிய விருதுகளை பெற்றுக் கொடுத்ததோடு இவரை கவனிக்கத்தக்க இயக்குனராக மாற்றியது.
கதை இல்லாமல் ஷூட்டிங்:
எனவே இவரின் இயக்கத்தில் நடிக்க தெலுங்கு, ஹிந்தி சினிமாவின் முன்னணி நடிகர்களும் ஆசைப்படுகிறார்கள். ஆனால் வெற்றிமாறனிடம் இருக்கும் ஒரே பிரச்சனை என்னவெனில் முழு கதையையும் தயார் செய்து கொண்டு படபிடிப்புக்கு போக மாட்டார். அவரின் சிந்தனையில் ஒரு கதை இருக்கும். அவருக்கு தோன்றுவதை எடுப்பார். அதன்பின் அவைகளை போட்டு பார்த்து அது சரியில்லை என்றால் கதையை மாற்றி மீண்டும் முதலிலிருந்து எடுப்பார்.
சூரியும், விஜய் சேதுபதியும் பட்ட பாடு:
காமெடி நடிகராக இருந்த சூரியை அழைத்து ‘உன்னை ஹீரோவாக்குகிறேன்’ என சொல்லி விடுதலை படத்தை துவங்கினார். 40 நாட்கள் ஷூட்டிங் என சொன்னார். ஆனால் அந்த படத்தின் ஷூட்டிங் ஒரு வருடத்திற்கு மேல் நடந்தது. வெறும் 8 நாட்கள் நடித்தால் போதும் என சொல்லி விஜய் சேதுபதியை அழைத்து வந்து பல நாட்கள் நடிக்க வைத்தார். அவருக்கு தோன்றுவதையெல்லாம் எடுத்துக் கொண்டே இருப்பார். எனவே விடுதலை படத்தை 2 பாகங்கள் எடுக்க வேண்டியதாயிற்று.
வாடிவாசலில் இருந்து எஸ்கேப் ஆன சூர்யா:
விடுதலை பொறுத்தவரை முதல் பாகம் அளவுக்கு இரண்டாம் பாகம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. அடுத்து சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்க முடிவெடுத்தார். வெற்றிமாறனை பற்றி தெரிந்து கொண்ட சூர்யா ‘முழுக் கதையும் தயார் என்றால் சொல்லுங்கள்.. நான் கால்ஷுட் கொடுக்கிறேன்’ என சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார்.
எனவே சிம்புவை அழைத்து ‘நாம் இணைந்து ஒரு படம் செய்வோம்.. வடசென்னை பேக்ட்ராப்’ என ஆரம்பித்தார். வெற்றிமாறன் அழைத்ததால் பார்க்கிங் பட இயக்குனர் படத்தை விட்டுவிட்டு சிம்பு இந்த படத்திற்கு வந்தார். சிம்புவை வைத்து புரமோ ஷூட்டெல்லாம் நடந்தது. சில காட்சிகளையும் எடுத்தார் வெற்றிமாறன். ஆனால், அதன்பின் சில காரணங்களால் படம் நின்றுபோனது. எனவே, சிம்புவோ வெளிநாட்டுக்கு போய்விட்டார்.
இரண்டு பாகங்களாக வரும் STR49:
செய்தியாளர்கள் கேட்டால் ‘இன்னும் ஒரு வாரத்தில் சொல்கிறேன்.. இன்னும் 10 நாட்களில் சொல்கிறேன்’ என சொல்லிக்கொண்டே இருக்கிறார் வெற்றிமாறன். இந்நிலையில் ஒரு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் ‘STR 49 படத்தை பொருத்தவரை என்னிடம் ஒரு மணி நேரம், 15 நிமிட காட்சிகளுக்கான கதை இருக்கிறது. இந்த கதையில் 5 எபிசோட் வருகிறது. என்ன செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை. அனேகமாக இது இரண்டு பாகங்களாக வரலாம்’ என சொல்லி சிரிக்கிறார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகவே ‘வெற்றிமாறன் திருந்த போவதில்லை.. முழுக்கதையையும் தயார் செய்துவிட்டு அவர் ஷூட்டிங் போவதுதான் நல்லது.. சிம்பு ரசிகர்கள் பாவம். இரண்டு பாகமும் முடிய 4 வருஷம் ஆகும்’ என பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.
