விடுதலை 2 படம் பிளாப்புன்னு சொன்னாங்க!. சக்சஸ் மீட்டா?!.. வெற்றிமாறன் யூ டூ!..
Viduthalai2: வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 20ம் தேதி வெளியான திரைப்படம்தான் விடுதலை 2. விடுதலை படத்தின் முதல் பாகம் 2023 மார்ச் மாதம் வெளியானது. இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தை கொடுத்த்து.
முதல் பாகம் உருவானபோதே இரண்டாம் பாகத்திற்காக 80 சதவீத காட்சிகளை வெற்றிமாறன் எடுத்துவிட்டதாக சொல்லப்பட்டது. எனவே, சில மாதங்காளில் 2ம் பாகம் வெளியாகும் என எதிர்பார்த்தார்கள். ஆனால், மீண்டும் ஒரு வருடம் படம் எடுத்தார் வெற்றிமாறன். இதனால் பட்ஜெட் அதிகரித்துக்கொண்டே போனது.
பல நாட்கள் படப்பிடிப்பு நடந்தும் திருப்தி அடையாத வெற்றிமாறன் ‘இது வேண்டாம். மீண்டும் எடுப்போம்’ என சொல்லி மாற்றி மாற்றி எடுத்துக்கொண்டே இருந்தார். முதல் பாகம் நல்ல லாபத்தை கொடுத்ததால் தயாரிப்பாளரும் செலவு செய்து கொண்டே இருந்தார். படத்தின் ரிலீஸுக்கு முதல் நாள் கூட வெற்றிமாறன் சில காட்சிகளை எடுத்ததாக சொல்லப்படுகிறது. முதல் மற்றும் இரண்டாம் பாகம் சேர்த்து 8 மணி நேரம் வரை ஓடும் காட்சிகளை எடுத்து வைத்திருப்பதாகவும் விடுதலை 4 பாகங்களை கூட வெளியிடலாம் என வெற்றி மாறன் சொல்லியிருந்தார்.
படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், சித்தாந்த ரீதியாகவும் பாராட்டை பெற்றது. ஆனால், வசூல் ரீதியாக விடுதலை 2 தோல்வி அடைந்ததாக சொல்லப்பட்டது. விடுதலை முதல் பாகத்தில் சூரிக்கு அதிக காட்சிகள் இருந்த நிலையில், இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி எதனால் அரசுக்கு எதிராக மாறினார் என்பதை காட்சிப்படுத்தியிருந்தார் வெற்றிமாறன்.
படம் முழுக்க புரட்சிகரமான வசனங்களை விஜய் சேதுபதி பேசிக்கொண்டே இருந்தார். இது ஜனரஞ்சக சினிமாவை ரசிக்கும் ரசிகர்களுக்கு பிடிக்காமல் போயிருக்கலாம் என கணிக்கப்படுகிறது. எனவே, விடுதலை 2 படத்திற்கு தியேட்டரில் கூட்டமே இல்லை. சுமார் 40 கோடி அளவில் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.
வெற்றிமாறனுக்கு விடுதலை 2 முதல் தோல்வி என பல ஊடகங்களில் செய்திகள் வெளியானது. ஆனால், விடுதலை சக்சஸ் மீட் என சொல்லி தயாரிப்பாளர் எல்ரட் குமார் வெற்றிமாறனை சந்தித்து அவருக்கு ஆளுயர மாலையை அணிவித்திருக்கிறார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியானது.
பொதுவாக தோல்விப்படங்களையும் சக்சஸ் மீட் நடத்தி வெற்றி பெற்ற படம் போல திரையுலகில் காட்டுவார்கள். இதில் இப்போது வெற்றிமாறனும் சேர்ந்துவிட்டாரா என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.