2024-ல் அதிக ஃபிளாப் படங்களை கொடுத்த விஜய் ஆண்டனி, ஜிவி!.. மியூசிக்க மட்டும் பாருங்க புரோ!..
GV Prakash: சினிமாவில் ஒரு திரைப்படத்தில் இயக்குனர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், எடிட்டர், இசையமைப்பாளர் என ஒரு படத்தின் வெற்றிக்கு பலரும் உழைத்தாலும் பளிச்சென முன்னால் தெரிவது ஹீரோ மட்டுமே. அதனால்தான் ஹீரோவாக நடிக்க பலரும் ஆசைப்படுவார்கள். எஸ்.ஜே.சூர்யா, சுந்தர் சி போன்ற பல இயக்குனர்களும் சினிமாவில் ஹீரோவாக நடிக்க துவங்கியது இதனால்தான்.
இயக்குனர்கள் நடிக்க வந்தால் கூட பரவாயில்லை. ஆனால், இசையமைப்பாளர்களும் நடிக்க வருவது என்பது தமிழ் சினிமாவில் மட்டுமே நடந்தது. அப்படி முதலில் வந்தவர் விஜய் ஆண்டனி. 2005ம் வருடம் வெளிவந்த சுக்ரன் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
அதன்பின், பல படங்களுக்கும் இசையமைத்துள்ளார். அதில் காதல் கொண்டேன் படத்தில் இடம் பெற்ற 'நாக்க மூக்க' பாடல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அதேபோல், நினைத்தாலே இனிக்கும் படத்தின் எல்லா பாடல்களுமே சூப்பர் ஹிட் அடித்தது. விஜயின் வேட்டைக்காரன், வேலாயுதம் ஆகிய படங்களுக்கு இசையமைத்தார்.
பல ஹிட் பாடல்களை கொடுத்திருந்தாலும் நடிக்கும் ஆசை வரவே நான் என்கிற படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். துவக்கத்தில் இவருக்கு நான், சலீம், பிச்சைக்காரன் ஆகிய படங்கள் ஹிட் அடித்தாலும் அதன்பின் இவரின் படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. அவர் இயக்கி நடித்து வெளியான பிச்சைக்காரன் 2 மட்டுமே ஹிட் அடித்தது.
2024ம் வருடம் இவரின் நடிப்பில் வெளியான மழை பிடிக்காத மனிதன், ரோமியோ, ஹிட்லர் ஆகிய 3 படங்களுமே தோல்விப்படங்களாக அமைந்தது. அதேபோல், ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி மகனான ஜிவி பிரகாஷும் சூப்பர் ஹிட் மெலடி பாடல்களை கொடுத்திருக்கிறார். இவரும் 2013ம் வருடம் டார்லிங் படம் மூலம் நடிக்க துவங்கினார்.
இவரின் நடிப்பில் 'திரிஷா இல்லனா நயன்தாரா' படம் மட்டுமே சூப்பர் ஹிட் அடித்தது. கடந்த 10 வருடங்களில் பல படங்களில் நடித்தும் அவை பெரிய வெற்றிப்படங்களாக அமையவில்லை. நடிகராக இவருக்கும் 2024ம் வருடம் சரியாக அமையவில்லை. ரெபள், கள்வன், டியர் ஆகிய 3 படங்களும் தோல்வி அடைந்தது.
ஆனால், இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷுக்கு 2024ம் வருடம் சிறப்பாக அமைந்தது. அவரின் இசையில் வெளிவந்த அமரன், லக்கி பாஸ்கர் ஆகிய 2 படங்களும் சூப்பர் ஹிட் அடித்திருக்கிறது. அதோடு, பெரிய நடிகர்களின் படங்களுக்கும் இசையமைக்க துவங்கியுள்ளார். எனவே, 'நடிப்புலாம் வேண்டாம். மியூசிக் மட்டும் போடுங்க' என ஜிவி பிரகாஷுக்கு ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.