அப்பாவால் 200 கோடி சம்பளம் வாங்கலாம்!.. ஆனால், தேர்தலில் வெற்றி பெற்றால் மன்னராட்சியா?!..
Actor vijay: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கியிருக்கிறார். விழுப்புரம் விக்கிரவாண்டி பகுதியில் கட்சியின் மாநாட்டையும் வெற்றிகரமாக நடத்தினார். இந்த மாநாட்டில் 8 லட்சம் விஜய் ரசிகர்கள் கலந்து கொண்டார்கள். விஜயின் இந்த அரசியல் மாநாடு தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
குறிப்பாக அதிமுக, திமுக கட்சியினரின் பார்வை விஜய் மீது திரும்பியிருக்கிறது. எனவே, அவரை விமர்சனம் செய்ய துவங்கினார்கள். திமுக, நாம் தமிழர் கட்சி சீமான் என பலரும் அவரை திட்டி தீர்த்தார்கள். ஆனால், அவரோ எதற்கும் ரியாக்ட் செய்யாமல் அமைதியாக இருந்தார்.
இந்நிலையில்தான், சமீபத்தில் நடந்த அம்பேத்கார் நூல் விழாவில் விஜய் கலந்து கொண்டார். இந்த விழாவில் திருமாவளவன் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், விஜய் கலந்து கொள்வது உறுதியானதும் அவர் அதிலிருந்து விலகினார். எனவே, விடுதலை சிறுத்தை கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கலந்து கொண்டார்.
இந்த விழாவில் பேசிய விஜய் திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார். ஆணவத்தோடு 200 தொகுதியில் வெற்றி பெறுவோம் என சொல்லும் உங்களையும், சுயநலத்தோடு கூட்டணி கணக்கு போட்டு செயல்படும் உங்களை 2026 சட்ட மன்ற தேர்தலில் மக்கள் மைனஸ் ஆக்குவார்கள் என பேசினார்.
அவருக்கு பின் பேசிய ஆதர் அர்ஜூனா ‘தமிழகத்தில் மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட நிறுவனம் சினிமாவை ஆண்டு கொண்டிருக்கிறது. 4 ஆயிரம் கோடி புழங்கும் ஒரு துறையை ஒரு நிர்வாகம் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறது’ எனப் பேசினார். இதைப்பேசியது ஆதவ் அர்ஜுனா என்றாலும் விஜய் அந்த மேடையில் இருந்ததால் அது அவரின் கருத்தாகவே பலரும் பார்க்கிறார்கள்.
இதில் திமுகவை ஆதரிப்பவர்கள் விஜயை விமர்சனம் செய்ய துவங்கிவிட்டார்கள். சிலரோ ‘அப்பாவால் சினிமாவில் நுழைந்து 200 கோடி சம்பளம் வாங்கும் நடிகராக மாறலாம். ஆனால், அப்பாவின் செல்வாக்கால் ஒருவர் அரசியலில் நுழைந்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் செல்வாக்கால் வெற்றி பெற்றால் அது மன்னராட்சியா?’ என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இதற்கு ‘விஜய் 36 வருடங்கள் உழைத்த பின்னரே 200 கோடி சம்பளம் வாங்கினார். ஆனால், உதயநிதி 5 வருடங்களுக்கு முன் அரசியலுக்கு வந்து இப்போது துணை முதல்வர் ஆகிவிட்டார். அது எப்படி சரி?’ என பதிலடி கொடுத்து வருகிறார்கள்.