கோடம்பாக்கமே போராடியும் முடியல! கார்த்திக்கை அடக்கிய கேப்டன்.. இது தெரியுமா?
நவரச நாயகன் கார்த்திக். பெண்களுக்கு மிகவும் பிடித்தமான நடிகர். 90கள் காலகட்டத்தில் ஒரு கனவு நாயகனாக வலம் வந்தவர். கனவு கன்னி, கனவு நாயகி என்று ஹீரோயின்களைத்தான் பெரும்பாலும் வர்ணிப்பார்கள். ஆனால் ஹீரோக்களில் அதிகம் வர்ணிக்கப்பட்ட நடிகராக இருந்தார் நடிகர் கார்த்திக். அழகான முகம், எதார்த்தமான நடிப்பு, வசீகரிக்கும் தோற்றம் என பெண்கள் மட்டுமில்லாமல் ஆண்களையும் சேர்த்தே ஈர்த்தார் கார்த்திக்.
ஆரம்பத்தில் பல படங்களில் நடித்தாலும் அவரை மிக உச்சத்தில் வைத்த படம் என்றால் அது மௌன ராகம் திரைப்படம்தான். அந்தப் படத்தில் குறைவான காட்சிகளில் அதாவது கேமியோ ரோலில் வந்தாலும் மௌனராகம் என்று சொல்லும் போது உடனே நம் நினைவுக்கு வருபவர் கார்த்திக்தான். அந்தப் படத்தில் துருதுருவென கேரக்டர், ரொமாண்டிக் காட்சி என பலரையும் கவர்ந்தார்.
மகா நடிகன் கார்த்திக் என்றே சொல்லலாம். அதே அளவுக்கு பல தயாரிப்பாளர்களின் வயிற்றில் அடித்தவரும் கார்த்திக்தான். இன்று பல தயாரிப்பாளர்கள் குறிப்பாக 80களில் கொடிகட்டி பறந்த தயாரிப்பாளர்கள் கார்த்திக்கை பற்றி புலம்பாமல் இருக்கவே மாட்டார்கள். பல லட்சக்கணக்கான பணத்தை கார்த்திக்கிடம் இழந்திருக்கிறேன் என்றுதான் சொல்வார்கள்.
குறிப்பாக காஜா முகைதீன் கார்த்திக்கிடம் சிக்கி பல லட்சங்களை இழந்திருக்கிறார். இதை பற்றி பிரபல நடிகரும் இயக்குனருமான பாரதி கண்ணன் கார்த்திக்கை பற்றி அவருடைய அனுபவங்களை கூறியிருக்கிறார். பாரதி கண்ணனிடம் ஒரு கதை இருந்ததாம். அதாவது நடிகர் ஆர்கே நடிப்பில் ‘எல்லாம் அவன் செயல்’ படத்தின் கதை போல 80லியே யோசித்து வைத்திருந்தாராம்.
இதை ஒரு தயாரிப்பாளரிடம் கூற அந்த தயாரிப்பாளர் ‘வேண்டுமென்றால் கார்த்திக்கை அப்ரோச் செய்து பாருங்க. இந்த கதை கார்த்திக்கு செட்டாகும்’ என சொல்லி கார்த்திக்கிடம் அனுப்பியிருக்கிறார். உடனே பாரதி கண்ணனும் கார்த்திக்கை சந்தித்து இந்த கதையின் ஒன் லைனை சொல்ல கூடவே அட்வான்ஸும் கொடுத்துவிட்டாராம். மீதி கதையை ‘ நான் நாளை ஊட்டிக்கு போகிறேன். அங்கு வந்து சொல்லுங்களேன்’ என்று கார்த்திக் கூறியுள்ளார்.
பாரதி கண்ணனும் இதை தயாரிப்பாளரிடம் சொல்ல அவரும் சரி என சொல்லியிருக்கிறார். அன்று இரவே மீண்டும் கார்த்திக்கிடம் இருந்து பாரதிகண்ணனுக்கு அழைப்பு வந்திருக்கிறது. எனக்கு உடனடியாக ஒரு ஐந்து லட்சம் வேண்டும் என கேட்க ஊட்டி போகும் போது கார்த்திக் கேட்ட ஐந்து லட்சம் மற்றும் ஒரு காரையும் பாரதிகண்ணனுடன் அனுப்பி வைத்திருக்கிறார் தயாரிப்பாளர்.
போனதுமே கொண்டு வந்த ஐந்து லட்சத்தை பாரதிகண்ணன் கார்த்திக்கிடம் கொடுத்து மீதி கதையை சொல்லியிருக்கிறார். ஆனால் கதை கார்த்திக்கு பிடிக்கவில்லை. கதையை மாற்ற சொல்லியிருக்கிறார். பாரதிகண்ணன் இதை தயாரிப்பாளரிடம் சொல்ல ‘பாரதி, இப்போதுதான் கார்த்திக்கை பற்றி துறையில் விசாரித்தேன். கால்ஷீட் சரியா கொடுக்கமாட்டார். பணமும் கிடைக்காது’ என்றெல்லாம் சொல்கிறார்கள். உடனே கொடுத்த பணத்தை வாங்கிட்டு வா என தயாரிப்பாளர் கூறியிருக்கிறார்.

பாரதிகண்ணனும் கார்த்திக்கிடம் சார், தயாரிப்பாளர் கொடுத்த பணத்தை கேட்கிறார். அட்வான்ஸ் வேணுனா மெதுவா கொடுங்க. இப்போ கொடுத்த ஐந்து லட்சத்தை கொடுங்கனு கேட்டிருக்கிறார். உடனே கார்த்திக் ‘பாரதி. என்னை பற்றி சினிமாத்துறையில் விசாரிக்கலையா? கார்த்திக்கிடம் பணம் கொடுத்தா திரும்ப கிடைக்காது. தெரியும்ல’ என சொல்லி ஷாக் கொடுத்திருக்கிறார். எந்த கமிஷன்லயும் சொல்லிக்கோ. நான் பார்த்துக்குறேன் என்றும் சொல்லி அனுப்பிவிட்டாராம்.
அப்போது கேப்டன்தான் நடிகர் சங்க தலைவராம். இதை கேப்டனிடம் சொல்ல விஜயகாந்தும் ஒரு நாள் சொல்லி பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்கள் மற்றும் கார்த்திக் இரு தரப்பினரையும் வரவழைத்திருக்கிறார். விஜயகாந்த் கார்த்திக்கிடம் ‘என்ன கார்த்திக்? இப்படி? ’ என கேட்டிருக்கிறார். கேப்டன், எனக்கும் இது டென்ஷனாகத்தான் இருக்கிறது. இன்றே ஒரு முடிவு வச்சிடுறேன் என சொல்லி வந்த தயாரிப்பாளர்களுக்கு இந்தெந்த தேதிகளில் நான் கால்ஷீட் கொடுக்கிறேன் என சொல்லியிருக்கிறார். உடனே காஜா முகைதீன் கோவத்தில் அங்கு இருந்த நாற்காலியை தூக்கி போட்டு உடைத்திருக்கிறார். ஆனாலும் கால்ஷீட்தான் தருகிறேன் என சொல்லியிருந்தேன். தந்து விட்டேன். அவ்வளவுதான் என சொல்லி டாட்டா காட்டி சென்று விட்டாராம் கார்த்திக்.
