என்னோட குடும்பம் மூணு வேளை சாப்பிட காரணமே ரசிகன் தான்.. எமோஷ்னலாக உருகிய விஷால்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். சினிமா பின்புலத்தோடு அறிமுகம் கிடைத்தாலும் தனது தனித்தன்மையால் புரட்சித்தளபதி பட்டத்தை பெற்றார். தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தாலும் சமீப காலமாக இவரின் படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வந்தது. அது மட்டும் இல்லாமல் நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராக இருப்பதால் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டும் வந்தார். இருப்பினும் மார்க் ஆண்டனி மற்றும் மதகஜராஜா திரைப்படங்களால் மீண்டும் இவரின் மார்க்கெட் உயிர்பெற்றது.
மேலும் நடிகர் சங்கம் கட்டிடம் முடிந்த பிறகு தான் என்னுடைய கல்யாணம் நடக்கும் என்று சபதம் போட்டார். அதைப்போல தற்போது நடிகர் சங்க கட்டடம் முடியும் தருவாயில் உள்ளது. சமீபத்தில் நடிகை சாய் தன்ஷிகாவிற்கும் விஷாலுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. கூடிய விரைவில் இவர்களது திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில் விஷால் திரைத்துறையில் அறிமுகமாகி இன்றுடன் 21 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்.
அதற்கு நன்றி செலுத்தும் விதமாக எமோஷனல் பதிவை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,” கடந்த 21 வருஷமாக நான் மட்டும் இல்லை எங்கள் குடும்பம் மூன்று வேளை சாப்பிடுவதற்கும், நானும் பல பேருக்கு சாப்பாடு கொடுப்பதற்கான தெம்பு கொடுத்தது தமிழ் மக்கள் தான். அவர்கள் கொடுத்த அந்த அன்பு ஆதரவு மற்றும் அந்த தன்னம்பிக்கைகள்தான் நான் இவ்வளவு தூரம் ஓடிக் கொண்டிருக்கிறேன்”.
”செல்லமே திரைப்படம் 2004 ஆம் ஆண்டு வெளியானது. அன்று முதல் இன்று வரை 21 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இன்று நான் எனது 35 வது திரைப்படம் ஆன மகுடம் திரைப்படத்தில் நடந்து கொண்டிருக்கிறேன். தமிழ் திரையுலகில் உதவி இயக்குனராக நுழைந்தேன். எனக்கான பாதையை மாற்றி கொடுத்தவர் ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் என்னுடைய அப்பா திரு ஜி.கே.ரெட்டி அவர்கள். இவர்கள் எல்லோரும் என்னை ஊக்கப்படுத்தி நீ நடிகனாக வேண்டும் என்று முன்னேற்ற பாதையில் அழைத்து சென்றார்கள்”.
”அதன் பிறகு நான் கூத்து பட்டரையில் பயின்று, செல்லமே வாய்ப்பு கிடைத்தது. நான் என்னுடைய தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், பாடல் ஆசிரியர்கள் என்னுடன் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன். அது மட்டும் இல்லாமல் விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள், ஆப்பரேட்டர்கள் எல்லோருக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன்”.
”மேலும் என் மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். அதையெல்லாம் தாண்டி கடவுளின் குழந்தைகள் என்னோட ரசிகர்கள். மற்றும் பொதுமக்கள் அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் நான் இங்கு இல்லை. என்னோட சாப்பாட்டுக்கு வழி காண்பித்த என் தெய்வங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்”.
”இது நம்மளுடைய வெற்றி உங்களை மகிழ்விப்பது தவிற எனக்கு வேறு எந்த வேலையும் கிடையாது. ரசிகன் கொடுத்த அன்பால் அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து என்னுடைய அம்மா பெயரில் அறக்கட்டளை ஒன்று ஆரம்பித்து படிக்க முடியாத ஏழை குழந்தைகளுக்கு படிக்க வைக்கிறேன்”. என்று மனம் உருகி நன்றி தெரிவித்துள்ளார்.
