‘ராட்சசன்’ அளவுக்கு எதிர்பார்க்கப்பட்ட படம்! ‘ஆர்யன்’ படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
 
                                    
                                இன்று விஷ்ணு விஷால் நடிப்பில் கிரைம் திரில்லர் பின்னணியில் வெளியாகியிருக்கிறது ஆர்யன் திரைப்படம். அறிமுக இயக்குனரான பிரவீன் கே இந்தப் படத்தை எடுத்திருக்கிறார். தமிழில் இன்று வெளியான நிலையில் தெலுங்கில் இந்தப் படம் நவம்பர் 7 ஆம் தேதி ரிலீஸாக இருக்கின்றது. தெலுங்கில் ரவி தேஜா நடிப்பில் ஒரு புதிய படம் இன்று வெளியாவதால் தன்னுடைய ஆர்யன் பட தேதியை தள்ளி வைப்பதாக விஷ்ணு விஷால் சமீபத்தில் அறிக்கை வாயிலாக தெரிவித்திருந்தார்.
தொடர் மர்மக் கொலைகளை ஆராயும் போலீஸ் அதிகாரியாக நம்பி என்ற கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். ஜிப்ரான் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.லால் சலாம் படத்திற்கு பிறகு இரண்டு வருடங்கள் கழித்து இந்தப் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் தலைகாட்டியிருக்கிறார் விஷ்ணு விஷால். ஆர்யன் திரைப்படத்திற்காக தன்னுடைய உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருந்தார்.
ராட்சசன் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு கிரைம் திரில்லர் கதை பின்னணியில் விஷ்ணு விஷால் நடிக்கும் திரைப்படம் என்பதால் படம் எப்படி இருக்கும் என்பதை பார்க்க ரசிகர்களும் ஆர்வமாக காத்திருந்தார்கள். இன்று படம் வெளியான நிலையில் எக்ஸ் தளத்தில் படத்தின் விமர்சனம் வெளியாகியிருக்கிறது. அதை இப்போது பார்ப்போம். ராட்சசன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு மீண்டும் போலீஸ் கெட்டப்பில் விஷ்ணு விஷால் நடித்துள்ளார்.
படத்தில் ஷ்ரதா தத்தா துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். செல்வராகவன் படத்திற்கு முக்கிய கருவாக இருக்கிறார். ஒரு இன்வஸ்டிகேஷன் பின்னணியில் படம் உருவாகியிருக்கிறது. பரபரப்பான திரைக்கதையில் அடுத்தடுத்து நடக்கும் மர்மங்கள் என படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்கிறார் இயக்குனர் பிரவீன் கே. முதல் பாதி திரில்லர், ஆக்ஷன், செண்டிமெண்ட் என பக்கா கமெர்ஷியல் படமாக நகர்கிறது.
எடுத்ததுமே செல்வராகவனை காண்பித்துவிடுகிறார்கள். இருந்தாலும் வினாடிக்கு வினாடி என்ன நடக்கும் என்ற ஒரு ஆர்வத்தை தூண்டுகிறார் இயக்குனர். இரண்டாம் பாதியில் எதற்காக கொலை நடக்கிறது என்ற குழப்பம் இருந்தாலும் அது நடக்கிற விதம் , டிவிஸ்ட் என யாரும் யூகிக்க முடியாத வகையில் பதற்றமாகவே இருக்கிறது. படத்தின் கருத்து சிந்திக்க கூடியதாகவே இருக்கின்றது.

ராட்சசன் படத்திற்கு பிறகு மீண்டும் தன்னுடைய சிறப்பான நடிப்பால் ஸ்கோர் செய்திருக்கிறார் விஷ்ணு விஷால். அதே போல் செல்வராகவனும் தான் வரும் காட்சியை தன்னுடைய நடிப்பால் சொந்தமாக்கியுள்ளார். இதுவரை வெளியான போலீஸ் கதையில் ஆர்யன் திரைப்படம் சற்று மாறுப்பட்டுள்ளதாகவும் திரில்லர் கதைகளிலும் வித்தியாசமானதாகவும் இருப்பதாக விமர்சித்து வருகின்றனர்.
படம் பார்த்த மற்றுமொருவர் தன்னுடைய பக்கத்தில் இந்தப் படத்தின் கதை யாருமே கெஸ் பண்ண முடியாதவகையில் இருந்ததாகவும் விசித்திரமாக இருந்ததாகவும் பதிவிட்டிருக்கிறார். ஆனால் ராட்சசன் படத்தை போல் இருக்கும் என யாரும் எதிர்பார்ப்புடன் போக வேண்டாம். இது முற்றிலும் அதைவிட வித்தியாசமான கதை என்றும் கூறப்படுகிறது. ஆனால் ஸ்பாய்லர் வருவதற்கு முன் சீக்கிரம் படத்தை தியேட்டரில் போய் பார்த்துவிடுங்கள் என்றும் அந்த ரசிகர் பதிவிட்டிருக்கிறார்.

