சினிமா முதல் கட்சி வரை.. எம்.ஜி.ஆர் பேச்சை தட்டாத என்.டி.ஆர்... ஆச்சரிய பின்னணி

by Akhilan |
சினிமா முதல் கட்சி வரை.. எம்.ஜி.ஆர் பேச்சை தட்டாத என்.டி.ஆர்... ஆச்சரிய பின்னணி
X

தமிழகத்தில் தனியாக அரசியல் கட்சி தொடங்கி பங்கேற்ற முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று ஆட்சியையும் பிடித்தவர் எம்.ஜி.ஆர். அவரைத் தனது குருநாதராக எண்ணிய தெலுங்கு நடிகர் என்.டி.ராமாராவ் எனப்படும் என்.டி.ஆரும் தெலுங்கு தேசம் கட்சியைத் தொடங்கி ஆந்திராவில் ஆட்சியைப் பிடித்தார்.

தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் முன்னணி நடிகராக வலம்வந்த நேரத்தில் தெலுங்கில் முன்னணி ஹீரோவாக ஜொலித்தவர் என்.டி.ஆர். இருவரும் பரஸ்பரம் நட்பு பாராட்டினர். தன்னை விட மூத்தவரான எம்.ஜி.ஆரைத் தனது குருவாகவே கொண்டாடினார் என்.டி.ஆர். கர்ணணாக சிவாஜி நடித்த படத்தில், முதியவர் வேடத்தில் அவரிடம் யாசகம் கேட்கும் வேடத்தில் நடித்தவர் என்.டி.ஆர்.

எம்.ஜி.ஆர்

அதேபோல், புராண கதைகளில் மட்டுமே கேட்டுப் பழகியிருந்த கண்ணணையும் ராமனையும் மக்கள் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியவர். எம்.ஜி.ஆர் நடித்த பல ரீமேக் படங்களில் ஆந்திரத் திரையுலகில் சக்கைபோடு போட்ட என்.டி.ஆரின் படங்களே... அந்த அளவுக்கு இருவருக்கும் கெமிஸ்ட்ரி இருந்தது. இருவரையே அந்தந்த மாநில மக்கள் தங்களின் ஆதர்ஸ நாயகனாக ஏற்றுக்கொண்டனர். எம்.ஜி.ஆரின் வார்த்தைகளுக்கு அவர் எந்த அளவுக்கு மரியாதை கொடுத்தார் என்பதற்கு ஒரு சம்பவத்தை உதாரணமாகச் சொல்வார்கள்.

எம்.ஜி.ஆர் படங்களைத் தயாரித்து புகழ்பெற்றிருந்த கோவை செழியன், என்.டி.ராமாராவை வைத்து படம் தயாரிக்க ஆசைப்பட்டார். ஆனால், பிஸியான நடிகரான என்.டி.ஆர் கால்ஷீட் கொடுப்பாரா எனத் தயக்கம். இதை எம்.ஜி.ஆரிடம் சொன்னபோது, அவரை நேரில் போய் பாருங்கள் என்று சொன்னதோடு, என்.டி.ஆரிடம் பேசவும் செய்திருக்கிறார். ஹைதராபாத்தில் என்.டி.ஆரைப் பார்க்கையில், எப்போது ஷூட்டிங் தொடங்கலாம் என்று கேட்டிருக்கிறார்.

எம்.ஜி.ஆர்

அந்த அளவுக்கு எம்.ஜி.ஆரின் வார்த்தைகளுக்கு மதிப்புக் கொடுப்பவர் என்.டி.ஆர். அதேபோல், என்.டி.ஆருக்கு முன்பாகவே கட்சி தொடங்கி ஆட்சியில் அமர்ந்தவர் எம்.ஜி.ஆர். அவரைப் பின்பற்றி கட்சி தொடங்க நினைத்த என்.டி.ஆர், அவரிடம் ஆலோசனை பெற நினைத்திருக்கிறார். அப்போது கட்சியின் பெயரைக் கேட்ட எம்.ஜி.ஆரிடம் தெலுங்கு ராஜ்ஜியம் என்று சொல்லியிருக்கிறார். அது வேண்டாம் தெலுங்கு தேசம் என்று வைத்துக் கொள்ளுங்கள் என்று எம்.ஜி.ஆர் சொன்னதை என்.டி.ஆர் ஆமோதித்து, அதே பெயரில் கட்சி தொடங்கி ஆட்சியைப் பிடித்தார்.

இதையும் படிங்க: சேஸிங்; மிரட்டல்; பூட்டப்பட்ட சர்ச் – எம்.ஜி.ஆர் நடத்திவைத்த அசோகன் திருமணத்தில் என்ன நடந்தது?

வெற்றிக்குப் பிறகு சென்னை வந்த என்.டி.ஆருக்குத் தனது ராமாவரம் தோட்டத்தில் மிகப்பெரிய விருந்தளித்தார் எம்.ஜி.ஆர். அத்தோடு சென்னை மக்களின் தாகம் தீர்க்கும் தெலுங்கு கங்கை திட்டம் குறித்தும் என்.டி.ஆரிடம் சொல்லியிருக்கிறார். எம்.ஜி.ஆரின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாத என்.டி.ஆர், அந்தத் திட்டத்தை தொடங்கியும் வைத்தார். அதேபோல், எம்.ஜி.ஆர் மறைந்தபோது நேரில் வந்து அஞ்சலி செலுத்திய என்.டி.ஆர், தனது குருநாதர் மறைந்துவிட்டதாக உணர்வுப்பூர்வமாக இரங்கல் தெரிவித்தார்.

Next Story