Cinema History
சேரன் பாண்டியன் படத்துல நடந்தது இதுதான்!. சுவாரஸ்ய தகவல்களை சொல்லும் ஒளிப்பதிவாளர்..
1991ல் ஈரோடு சௌந்தர் கதை எழுத கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய படம் சேரன் பாண்டியன். சரத்குமார், விஜயகுமார், ஸ்ரீஜா, நாகேஷ், ஆனந்த்பாபு, கவுண்டமணி, செந்தில், நல்லெண்ணை சித்ரா, குமரிமுத்து உள்பட பலர் நடித்துள்ளனர். சௌந்தர்யன் இசை அமைத்துள்ளார். கே.எஸ்.ரவிக்குமாருக்கு இது 2வது படம்.
காதல் கடிதம், கண்கள் ஒன்றாக பாடல்கள் இனிமையாக இருக்கும். படத்தில் பெரிய கவுண்டராக விஜயகுமாரும், சின்ன கவுண்டராக சரத்குமாரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள். கிராமிய கதையில் மட்டுமல்லாமல் காமெடியிலும் பட்டையக் கிளப்பிய படம் இதுதான்.
சேரன் பாண்டியன் படத்தின் ஒளிப்பதிவாளர் அதில் பணியாற்றிய அனுபவங்கள் குறித்து இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கேஎஸ்.ரவிகுமார் இயக்கத்தில் சேரன்பாண்டியன் படத்தில் ஒளிப்பதிவு செய்தேன். படத்தை முடித்துப் போட்டுப் பார்க்கும்போது நாம் தான் இந்தப் படத்தில் வேலை செய்தோமா என்றே ஆச்சரியமாக இருந்தது. ஆர்.பி.சௌத்ரி சார் பார்த்துட்டு இது வந்து பாரதிராஜா படம் மாதிரியே இருக்கேன்னு சொன்னாரு. அப்பாட தப்பிச்சோம்டான்னு நினைச்சேன். அதுவரை படம் நல்லாலன்னு சொல்லிட்டா நம்மளைத் துரத்தி விட்டுருவாங்களேன்னு நினைச்சு பயந்துக்கிட்டு இருந்தேன்.
அப்போ கே.எஸ்.ரவிக்குமார் ஈரோடு சௌந்தர்கிட்ட ஒர்க் பண்ணினாரு. நான் பாரதிராஜா யூனிட்ல இருந்தேன். ஒரு பிலிம் பெஸ்டிவல்ல ரவிக்குமார் என்னைப் பார்த்தார். ஏய்.. நீ பாரதிராஜா கிட்ட தானே இருக்கே. நான் ஒரு கதை சொல்றேன். அதுல அவரு நடிச்சாருன்னா நீ தான் கேமரா மேன்னு சொன்னாரு. அதைப் போயி நான் பாரதிராஜா சார்கிட்ட சொன்னேன். இதுல உனக்கு ஏதாவது ஆதாயம் இருக்கான்னு கேட்டார் பாரதிராஜா. ஆமா. நீங்க நடிச்சா நான் தான் கேமரா மேன்னு சொன்னேன். உடனே அவர், கதை பிடிச்சிருந்தா தான் நான் நடிப்பேன்னு சொன்னார்.
அப்புறம் ஈரோடு சௌந்தர் கதையை சொல்ல, கதை நல்லாருக்கு. ஆனா பாரதிராஜா நடிக்கலன்னு சொல்லிட்டாரு. ஏன்னு கேட்டதுக்கு நான் நடிச்சா பேரு கெட்டுடும்னு சொல்லிட்டாரு. இப்படியே அந்த வாய்ப்பும் போயிடுச்சு. அப்படியே ஒரு தடவை மனோஜ் குமார் ஒரு படம் இருக்கு. ஆர்.பி.சௌத்ரி சார் தான் தயாரிப்பு. நீ தான் கேமரா மேன்னு சொன்னார். இவ்வாறு அவர் பேசினார்.