இந்த படங்கள் எல்லாம் அட்டர் ஃப்ளாப்ன்னு சொன்னா நம்புவீங்களா?...பட் இப்போ கிளாசிக்!..
சில திரைப்படங்கள் மிகவும் கிளாசிக் திரைப்படங்களாக நாம் கொண்டாடி வந்திருப்போம். ஆனால் அத்திரைப்படங்கள் வெளியான போது அது பெரும் தோல்வியை அடைந்திருக்கும். “என்னது இந்த படமா ஃப்ளாப் ஆச்சா?” என நமக்கு ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட பாக்ஸ் ஆஃபீஸில் தோல்வியடைந்த ஆனால் கிளாசிக்காக போற்றப்படும் திரைப்படங்களை பார்க்கலாம்.
அன்பே சிவம்
2003 ஆம் ஆண்டு கமல்ஹாசன், மாதவன், கிரண் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் “அன்பே சிவம்”. இத்திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பல வசனங்கள் இப்போதும் பிரபலமானவை.
ஆனால் இத்திரைப்படம் வெளியானபோது பாக்ஸ் ஆஃபிஸில் தோல்வி அடைந்துள்ளது. இத்திரைப்படத்திற்கு போட்டியாக விக்ரம் நடித்த “தூள்” திரைப்படம் வெளியானது. இது ஒரு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் “அன்பே சிவம்” திரைப்படத்தின் தோல்வி குறித்து ஒரு முறை கமல்ஹாசன் பேசியபோது திருட்டு டிவிடியே காரணம் என கூறியது குறிப்பிடத்தக்கது.
அஞ்சலி
1990 ஆம் ஆண்டு ரகுவரன், ரேவதி ஆகியோரின் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “அஞ்சலி”. மிகவும் நேர்த்தியாகவும் குழந்தைகளை வைத்து சென்டிமென்ட்டலாகவும் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் பாக்ஸ் ஆஃபீஸில் படுதோல்வி அடைந்திருக்கிறது. குறிப்பாக 1991 ஆம் ஆண்டு இத்திரைப்படத்தை ஆஸ்காருக்கு அனுப்பியுள்ளனர். ஆனால் நாமினேஷனுக்குள் நுழையவில்லை.
விக்ரம்
1986 ஆம் ஆண்டு கமல்ஹாசன், அம்பிகா, சத்யராஜ், ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “விக்ரம்”. சமீபத்தில் வெளிவந்த “விக்ரம்” திரைப்படத்தை தொடர்ந்து 1986 ஆம் ஆண்டு வெளியான “விக்ரம்” திரைப்படம் பெரிதும் பேசப்பட்டது.
இத்திரைப்படம் முழுக்க முழுக்க பிரம்மாண்டமான ஆக்சன் திரைப்படமாக அப்போது உருவானது. ஆங்கில திரைப்படங்களுக்கு இணையான கதையம்சம் கொண்ட இத்திரைப்படம் பாக்ஸ் ஆஃபீஸில் படுதோல்வி அடைந்திருக்கிறது.
கர்ணன்
“என்னது கர்ணன் தோல்விப்படமா?” என்று நீங்கள் ஆச்சரியப்படுவது தெரிகிறது. ஆம்! சிவாஜி கணேசன் நடிப்பில் 1964 ஆம் ஆண்டு வெளியான “கர்ணன்” திரைப்படம் பாக்ஸ் ஆஃபீஸில் படுதோல்வி அடைந்தது. இப்போதும் கிளாசிக் பட வரிசையில் இருக்கும் இத்திரைப்படம் என்ன காரணத்தினால் தோல்வியடைந்தது என தெரியவில்லை. எனினும் “கர்ணன்” திரைப்படம் சில ஆண்டுகளுக்கு முன்பு டிஜிட்டல் வடிவில் திரையரங்குகளில் மீண்டும் வெளிவந்து மாபெரும் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.